;
Athirady Tamil News

சிங்கப்பூர் முழுக்க அதிரடி சோதனை: ரூ.6000 கோடி, ஆடம்பர கார்கள், வீடுகளை கைப்பற்றிய காவல்துறை!!

0

சிங்கப்பூரில் ஆடம்பர வீடுகள், கார்கள், கைக்கடிகாரங்கள் உட்பட சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிங்கப்பூர் வரலாற்றில் இது மிகப்பெரிய பணமோசடி சோதனை என்று கூறப்படுகிறது.

சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் தங்க கட்டிகள், டிசைனர் கைப்பைகள், ஒயின் மற்றும் கட்டுக்கட்டாக இருந்த பணம் ஆகியவை அடங்கும்.

இந்த நடவடிக்கையில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருந்தனர்.

உலகின் மிகக் குறைந்த குற்ற விகிதங்களைக் கொண்ட சிங்கப்பூரில் இந்த அளவிலான சோதனைகள் மிகவும் அரிதானவை.

சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் தங்க கட்டிகள், டிசைனர் கைப்பைகள், ஒயின், கட்டுக்கட்டாக இருந்த பணம் ஆகியவை அடங்கும்.

சிங்கப்பூர் முழுவதும் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டதாக காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.

பணக்காரப் பகுதிகள் உட்பட பல்வேறு இடங்களிலும் 94 வீடுகள், 50 ஆடம்பரக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பணமோசடி மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகளில் 31 முதல் 44 வயதுக்கு உட்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் சீனா, கம்போடியா, துருக்கி மற்றும் வனுவாட்டு ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்கள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தங்களது நாடுகளில் செய்த ஆன்லைன் மோசடி, சூதாட்டம் போன்ற குற்ற நடவடிக்கைகளில் கிடைத்த வருமானத்தை சிங்கப்பூரில் மாற்றுவதற்கு இந்தக் குழு முயற்சி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

“குற்றவாளிகள் தங்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாக சிங்கப்பூரை பயன்படுத்துவதை சகித்துக்கொள்ள மாட்டோம்,” என்று குற்றங்களை விசாரிக்கும் காவல்துறை பிரிவின் இயக்குநர் டேவிட் செவ் கூறினார்.

“இந்த குற்றவாளிகளுக்கு நாங்கள் கூறும் செய்தி ஒன்றுதான்; நாங்கள் உங்களைப் பிடித்தால், உங்களைக் கைது செய்வோம். உங்கள் முறைகேடான பணத்தைக் கண்டறிந்தால், நாங்கள் அவற்றைப் பறிமுதல் செய்வோம். எங்கள் சட்டங்களுக்கு உட்பட்டு உங்களை நடத்துவோம்,” என்று அவர் கூறினார்.

பிடிபட்ட 12 பேர் விசாரணைக்கு உதவி வருவதாகவும், மேலும் எட்டு பேர் தற்போது தேடப்படும் பட்டியலில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

“மோசடி பண முதலீடு அடையாளம் காணப்பட்டுள்ள” நிதி நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாக நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பணமோசடி ஒழிப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாத நிறுவனங்களுக்கு எதிரான “உறுதியான நடவடிக்கை” எடுப்பதாகவும் அது கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.