;
Athirady Tamil News

இந்து – பௌத்த மத கலவரத்தை தடுக்க சட்ட நடவடிக்கை எடுங்கள் – சரத் வீரசேகர!!

0

குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் இனமுரண்பாட்டை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தொல்பொருள் மரபுரிமைகளை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்றுள்ள இருதரப்பு முரண்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராய எதிர்பார்த்துள்ளேன் என அக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறவுள்ள பொங்கல் வழிபாடு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கு ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகின்றனர்.

குருந்தூர் விகாரையில் உள்ள பௌத்த மத புராதன சின்னங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்டுள்ளன.

குருந்தூர் மலையில் இந்து மத வழிபாடுகளில் ஈடுபடலாம் என முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியமை குறித்து நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

குருந்தூர் மலையில் மத வழிபாடுகளில் ஈடுபடும் போது முரண்பாடுகள் தோற்றம் பெறலாம் என முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

குருந்தூர் மலையில் இந்து வழிபாடுகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து 500 இற்கும் அதிகமான சிங்களவர்கள் குருந்தூர் மலைக்கு செல்ல உள்ளனர். இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஊடாக முரண்பாடுகள் தோற்றம் பெறலாம்.

குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் இனமுரண்பாட்டை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

நாட்டில் இனங்களுக்கு இடையில் மீண்டும் இன முரண்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுகளை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகள் குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராய எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.