;
Athirady Tamil News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய காவிரி ஆணையத்திடம் முறையிடுவோம்- டி.கே.சிவகுமார்!!

0

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. ஆனாலும் அங்குள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. மேலும் இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதற்கிடையே கர்நாடக மாநில துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவகுமார், எங்களிடம் நீர் இருப்பு இல்லாததால் தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று கூறினார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையமும் 10ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் 108.86 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 219 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதேபோல் 84 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டமும் 78.70 அடியாக உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18ஆயிரத்து 145 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பெங்களூருவில் உள்ள முதல்-அமைச்சரின் இல்லமான கிருஷ்ணாவில் முதல்-அமைச்சர் சித்தராமையா, துணை முதல் அமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான சிவகுமார் ஆகியோர் மைசூரு, மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மைசூரு, மண்டியா மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரை உடனடியாக நிறுத்திவிட்டு கர்நாடக விவசாயிகளுக்கு முடிந்த அளவு தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த கூட்டம் முடிந்ததும் துணை முதல்அமைச்சர் டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதற்குமேல் எங்களிடம் போதிய நீர் ஆதாரம் இல்லாத காரணத்தால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீர் வெளியேற்றத்தை நிறுத்தக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்திடம் உரிய மனுதாக்கல் விரைவில் செய்யப்படும். மேலும் தண்ணீர் திறப்பின் கட்டுப்பாடு தற்பொழுது வரை மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது. அதை புரிந்து கொள்ளாமல் கர்நாடக மாநில பா.ஜ.க. மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் காங்கிரஸ் அரசு தண்ணீர் வெளியேற்றி வருவதாக குற்றம் சாட்டி அரசியல் செய்து வருகின்றனர். வறட்சி காலத்தில் தற்போது போல் பா.ஜ.க. அரசு காலத்தில் தமிழகத்திற்கு ஆணைய உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு குறித்து கடந்த கால குறிப்புகள் எங்களிடம் உள்ளது.

அதை தக்கசமயத்தில் வெளியிட்டு இந்த பிரச்சினையில் அரசியல் செய்துவரும் எதிர்கட்சியினருக்கு தக்க பாடம் புகட்டப்படும். மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என வலியுறுத்தி வரும் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று விரைவில் கர்நாடக மாநில அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறும். மழை இல்லாததால் தண்ணீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் முதலில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டோம். ஆனால் அவர்களை திருப்திப்படுத்த முடியவில்லை. விவசாய தேவைகளை விட குடிநீர் தேவைக்காக தண்ணீரை வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.

இந்த சூழலில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் பொம்மை அரசுக்கு கடிதம் எழுதினார். இதற்கு முன் அவரது ஆட்சிக் காலத்திலும், தமிழகத்திற்கு நெருக்கடியான காலங்களில் தண்ணீர் வழங்கப்பட்டது. தேவகவுடா பிரதமராக இருந்தபோதும் தண்ணீர் விடப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் திறக்கப்பட்டது. இது பற்றிய பதிவுகள் உள்ளன. இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.