உலகிலேயே மிகச்சிறிய ஸ்பூன் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இந்திய வாலிபர்!!
சிலர் தங்களது அசாத்திய செயல்களால் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதோடு, உலக சாதனைகளையும் படைக்கின்றனர். அதன்படி, சமீபகாலமாக இடைவிடாத சாகசம், நீண்ட நேரம் சமையல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிலர் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்தவகையில், பேனாவின் நுனியை விட மிகச்சிறிய மரக்கரண்டியை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார் பீகாரை சேர்ந்த சஷிகாந்த் பிரஜாபதி என்ற வாலிபர். கைவினை பொருட்கள் தயாரிப்பதில் கைதேர்ந்தவரான இவர் 1.6 மில்லி மீட்டர் அளவில் உலகிலேயே மிகச்சிறிய ஸ்பூனை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை செய்ய பல முறை முயற்சி செய்த சஷிகாந்த் 10 முறை தோல்வி அடைந்துள்ளார்.
ஆனாலும் தனது விடாமுயற்சியால் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து அதில் வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்திய கலைஞரான நவ்ரதன் பிரஜாபதி மூர்த்திகர் உருவாக்கிய 2 மில்லி மீட்டர் அளவில் மர ஸ்பூன் தான் உலகின் மிகச்சிறிய ஸ்பூன் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று இருந்தது. தற்போது அந்த சாதனையை சஷிகாந்த் முறியடித்துள்ளார். அவர் இந்த ஸ்பூனை தனித்தனி பாகங்களாக செய்யாமல் ஒரே மரத்துண்டில் செய்து அசத்தி உள்ளார்.