;
Athirady Tamil News

அமெரிக்க அதிபர் பதவி.. இந்திய வம்சாவழி வேட்பாளருக்கு எலான் மஸ்க் பாராட்டு!!!

0

உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில், 2024 நவம்பரில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே தற்போது வரை களத்தில் இறங்க இருக்கின்றனர். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட ஆர்வமாக உள்ளார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக இருக்கிறார். ஆனால் அவர் மீது உள்ள வழக்குகளின் தீர்ப்புகளை பொறுத்தே அவர் போட்டியில் இருப்பாரா இல்லையா என தெரிய வரும்.

இந்நிலையில் குடியரசு கட்சி சார்பிலேயே 10-க்கும் மேற்பட்டவர்கள் வேட்பாளராக போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியிலேயே நிக்கி ஹேலி, ஹிர்ஷ் வர்தன் சிங், மற்றும் விவேக் ராமஸ்வாமி ஆகிய 3 இந்திய வம்சாவளியினரும் தீவிரமாக களம் இறங்கி இருக்கின்றனர். இவர்கள் அனைவரிலும் மிகவும் வயது குறைந்தவரும், ஹார்வர்டு மற்றும் யேல் பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவரான விவேக் ராமஸ்வாமி, கேரளாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய இந்திய பெற்றோர்களுக்கு பிறந்தவர்.

பல அதிரடி திட்டங்களையும், கருத்துக்களையும் கூறி வரும் விவேக், அமெரிக்காவில் வாக்களிக்கும் வயதை 25 ஆக அதிகரிக்க வேண்டும் என வாதாடுகிறார். சில மாதங்களுக்கு முன் உலகின் நம்பர் 1 பணக்காரரான அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், தனது சீன சுற்றுபயணத்தின் போது தெரிவித்ததாவது, “அமெரிக்காவும், சீனாவும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். சீனாவில் எனது வர்த்தகத்தை விரிவுபடுத்த போகிறேன். சீனாவின் சக்தியையும், நம்பிக்கையையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்,” என்று அவர் கூறியிருந்தார். ஆனால் இதை குறிப்பிட்டு மஸ்கை விமர்சித்திருந்தார் விவேக்.

அப்போது அவர், “டுவிட்டரை எக்ஸ் என மாற்றி மேம்படுத்தும் முயற்சியை ஆதரிக்கிறேன். அதே வேளையில், சீனா தனது மறைமுக நோக்கங்களுக்காக அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களை பொம்மைகளை போல் இயக்குவதை எதிர்க்கிறேன். இதற்கு அமெரிக்கர்கள் கருவிகளாக போய் விட கூடாது. இதனை எதிர்க்கும் தலைமை வேண்டும்,” என்று விமர்சித்து இருந்தார். இந்நிலையில் டக்கர் கார்ல்ஸன் எனும் ஒரு பிரபல தொலைக்காட்சி பேட்டியாளருக்கு விவேக் ராமசாமி பேட்டியளித்தார். இப்பேட்டியின் வீடியோவை இணைத்து தனது எக்ஸ் (டுவிட்டர்) கணக்கில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார் எலான் மஸ்க். தன்னை விமர்சித்த விவேக் ராமசாமியை, ஆச்சரியப்படும் விதமாக மஸ்க், “ஒரு நம்பிக்கைக்குரிய வேட்பாளர்” என பாராட்டியுள்ளார்.

இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனாக், பிரிட்டன் பிரதமராக இருந்து வரும் நிலையில், அமெரிக்காவிலும் அதே போல் ஒருவர் வரவேண்டும் என பல இந்தியர்கள் விரும்புகிறார்கள். வைரலாகியிருக்கும் இந்த வீடியோவை கண்ட இந்தியர்கள், தன்னை விமர்சித்தவராக இருந்தாலும் விவேக் ராமசாமியின் தலைமை மற்றும் திறமை குறித்து எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்திருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.