உக்ரைனின் அதிரடி தாக்குதல் – முறியடித்த ரஷ்யா..!
ரஷ்யா தனது தலைநகரான மொஸ்கோ மற்றும் கருங்கடற் பரப்பில் உக்ரைனின் ஆளில்லா விமானங்களின் தாக்குதல் அலையொன்றை முறியடித்தாக இன்று அறிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் தரவுகளின் படி இன்று அதிகாலை 4:00 மணியளவிலேயே இந்த தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டதாக தெரியவருகிறது.
உக்ரைன் மீதான போருக்குப் பின்னர் இவ் வருடத்தில் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவை மையப்படுத்திய வான் தாக்குதல்கள் அண்மைய வாரங்களில் அதிகமாக இடம்பெற்றுவருகிறது.
இதன் காரணமாக மொஸ்கோவாசிகள் தமது நகர் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை இழந்துவருகிறார்கள்.
இந்த நிலையில், ரஷ்யத் தலைநகரும் கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அதன் கடற்படை இலக்குகளும் நேற்றிரவு ஒரே சமயத்தில் குறிவைக்கப்பட்டிருந்தன.
மொஸ்கோ மீது தாக்குதல் நடத்தும் வகையில் வெடிமருந்துடன் அனுப்பட்ட ஆளில்லா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் இந்த விமானங்கள் இலக்கு வைத்த கட்டிடத்துக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லையெனவும் நகர முதல்வர் செர்ஜி சோபியானின் தெரிவித்துள்ளார்.
மொஸ்கோ மற்றும் அதன் பெருநகப் பிராந்தியத்தில் உள்ள இடங்களை குறிவைத்து கடந்த சிலவாரங்களாவே தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.
இன்றைய தாக்குல் கிரெம்ளினில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கண்காட்சி மைய கட்டத்தை இலக்கு வைத்ததாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.
இதே சமகாலத்தில் கருங்கடல் பிராந்தியத்திலும் ரஸ்ய கடற்படைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆளில்லா கடற்கலம் மூலமான தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனின் தானிய ஏற்றுமதியை அங்கீகரித்த ஐ.நா.வின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க கடந்த மாதம் ரஸ்யா மறுத்த பின்னர், அண்மைய வாரங்களில், கருங்கடல் பிராந்தியத்திலும் ரஷ்யா கடற்கலங்களுக்கு எதிராக ஆளில்லா கடற்கலம் மூலம் தாக்குதலை நடத்தும் முயற்சிகளை உக்ரைன் அதிகரித்துவரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரஸ்யாவின் எதேச்சாதிகாரமான கடல் முற்றுகைக்கு மத்தியிலும், உக்ரைனில் இருந்து புறப்பட்ட முதலாவது தானிய கப்பல் நேற்று துருக்கியின் இஸ்தான்புல் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
உக்ரைனிய துறைமுகங்களில் இருந்த புறப்படும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ரஷ்யா மிரட்டியிருந்தாலும் ஹொங்கொங்கை பதிவாக கொண்ட இந்த கப்பல் கடந்த புதன்கிழமை உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.