வடகொரியாவுடன் முன்நிபந்தனையின்றி பேச அமெரிக்க விருப்பம் !!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னை முன்நிபந்தனையின்றி சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ் விடயம் பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்கிர்பே கூறுகையில் ,
“ஆசியாவில் சீன ஆதிக்கம், பசிபிக் தீவுகளுடனான உறவு, மற்றும் வட கொரியாவின் அணு ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா, தென்கொரிய அதிபர் யூன்சுக் யியோல் ஆகியோருடன் முத்தரப்பு சந்திப்பு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதற்கு பின் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னுடன் எந்த வித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தை நடத்த ஜோ பைடன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை பல முறை சந்தித்து பேசியிருந்தாலும் அவை தனிப்பட்ட சந்திப்புக்களாகவே காணப்பட்டன.
இந்நிலையில் தற்போது வட கொரிய அதிபருடனான சந்திப்பில் அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையே முக்கிய விடயமாக கருதப்படும்.” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபருடனான சந்திப்புக்கு வடகொரியா தரப்பிலிருந்து சம்மதம் தெரிவித்துவிட்டதாக வடகொரியா மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பைடன், கிம்ஜோங் சந்தித்து பேசக்கூடும் என அரசியல் வட்டார தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.