பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றமா? சிறுபான்மை இந்து, கிறிஸ்தவர், சீக்கியர் நிலை என்ன?
பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தில் புனித குரான் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சமீபத்தில் நடந்தது. அதன் பிறகு ஃஜரான்வாலாவில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதன்கிழமை மாலை கராச்சி செய்தியாளர் மன்றத்தின் முன்பு கிறிஸ்தவர்களும், சமூக சேவை அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அவர்களை தண்டிக்க வேண்டும் என ஆர்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எந்த ஆதாரமும் இல்லாத ஒரு குற்றச்சாட்டின் பேரில் இவை அனைத்தும் நடந்ததாகவும், குற்றச்சாட்டு குறித்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் பிபிசியிடம் பேசிய ஒரு சமூக சேவகர் கூறினார்.
“குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட உடனேயே தீ வைப்பு தொடங்கியது. பைபிள்கள் எரிக்கப்பட்டன. தேவாலயங்களை எரிக்கத் தொடங்கினர். மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் பாதுகாப்பாக இல்லை. அவர்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்கின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாத்தின் புனித நூலான குரானை அவமதித்தது மற்றும் தெய்வ நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் ஃஜரான்வாலா போலீசார் இரண்டு கிறிஸ்தவ இளைஞர்கள் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஃபைசலாபாதில் உள்ள ஃஜரான்வாலா தாலுகாவில் நடந்த வன்முறையில் ஒரு தேவாலயம் எரிக்கப்பட்டது. இது தவிர கிறிஸ்தவ மக்கள் வாழும் காலனி மற்றும் அப்பகுதியில் உள்ள சில அரசு கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டன.
“எங்கள் வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பாக இல்லை. இங்கு எதுவும் பாதுகாப்பாக இல்லை. பாகிஸ்தான் இந்தியா போல் ஏன் மாறி வருகிறது? தெய்வ நிந்தனை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்” என்று பாதிரியார் கஜாலா ஷாபிக் கண்களில் கண்ணீர் மல்கக் கூறினார்.
“நாங்கள் இந்த நாட்டில் வாழவில்லை என்பது போல உணர்கிறோம். இந்த நாடு எங்கள் தாயைப் போல் இல்லை. நாங்கள் ஆதரவற்றவர்கள், பாகிஸ்தானியர்கள் அல்ல என்பதுபோல உணர்கிறோம். நாங்கள் வெளிநாட்டினர் என்பது போல உள்ளது. வேற்று நாட்டு குடிமக்களான நாங்கள் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது,” என்று ஒரு கிறிஸ்தவர் சொன்னார்,
“தற்போது எந்த அரசியல் கட்சியின் ஆட்சியும் இங்கு இல்லை. அரசு மற்றும் நிர்வாகத்தின் நடவடிக்கை மிகவும் மெதுவாக உள்ளது. அதனால்தான் தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, இதுபோன்ற வன்முறையை பரப்பியவர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும்,” என்று சமூக ஆர்வலர் சபீர் மைக்கேல் கூறினார்.
ஃபைசலாபாத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் துறைமுக நகரமான கராச்சியில் போலீசார் தீவிர விழிப்பு நிலையில் உள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கான உரிமைகளை கோரி சிறுபான்மையினர் அணிவகுப்பு முதல்முறையாக சென்ற வாரம் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகங்கள் மீதான அட்டூழியங்கள் மற்றும் அடக்குமுறைகள் பற்றிய விஷயங்களை இந்த நடைபயணத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியிருந்தனர்.
வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டவர்களுக்காக கராச்சியில் செயல்படும் லிவிங் ஹோப் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் ஸஜல் ஷஃபீக் பிபிசியிடம் பேசினார்.
“எங்கள் புகலிடத்தில் இப்போது ஐந்து பெண்கள் வசிக்கிறார்கள். ஜெரேஷ் என்பவர் இப்போது கூட இரவில் பயந்து கத்துகிறார். அவருக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது. சில மணிநேரங்களுக்கு ஒரு முறை கூச்சலிடுவார்,” என்று ஷஃபீக் தெரிவித்தார்.
ஜெரேஷ் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவருடைய மையத்திற்கு வந்தார். வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து ஜெரேஷ் மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கராச்சியில் நடந்த சிறுபான்மையினர் அணிவகுப்பில் மிக முக்கியமான விஷயமாக வலுக்கட்டாய மதமாற்றம் இருந்தது.
நேஹாவை உதாரணம் காட்டும் ஸஜல், “இது பொதுவாக எல்லோருக்கும் நடக்கிறது. நேஹா எங்கள் மையத்திற்கு வந்தபோது அவரால் இரவில் தூங்க முடியாமல் இருந்தது. ஆண்களுக்கு மத்தியில் செல்லமாட்டார். ஆனால் ஐந்தாண்டுகளுக்குப்பிறகு இப்போது அவரால் மேடையேறி எல்லா விஷயங்கள் பற்றியும் பேச முடிகிறது,” என்றார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து சிறுமிகளை கட்டாய மதமாற்றம் செய்த சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் சென்ற ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது.
“இந்து சிறுமிகள் கடத்தப்படுகின்றனர். நமது கோவில்களை மாஃபியா கைப்பற்றுகிறது. ஆனால் அரசு எதுவும் செய்யாமல் கண்களை மூடிக்கொண்டு இருக்கிறது” என்கிறார் பாகிஸ்தானில் சனாதன் தர்ம் குளோபல் இயக்கத்தை நடத்தி வரும் மனோஜ் செளஹான்.