;
Athirady Tamil News

சந்திரயான்-3: நிலாவின் தென் துருவத்தில் புதைந்துள்ள ரகசியம் என்ன? ரஷ்யாவுக்கு முன் இந்தியா கண்டுபிடிக்குமா?

0

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் நிலாவுக்குச் செல்லும் மூன்றாவது பயணம்தான் சந்திரயான்-3 திட்டம்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி புறப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், 40 நாட்கள் நீண்ட பயணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும்.

நிலவின் மேற்பரப்பிலுள்ள அதிர்வுகள் குறித்த ஆய்வுக்காக சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 2-இன் விக்ரம் தரையிறங்கி கலன், பிரக்யா ஊர்தி கலன் ஆகியவையும் அதே தென் துருவத்தில் தரையிறங்க அனுப்பப்பட்டன.

தற்போது சந்திரயான் 3, அதே பகுதியில்தான் தரையிறங்கப் போகிறது.

இருப்பினும், சந்திரயான் 1, நிலவின் தென் துருவத்தில் மோதி தரையிறங்கியது. சந்திரயான் 2 மெதுவாக தரையிறங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

ஆனால், இப்போது சந்திரயான் 3 மூலம் நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறங்கும் முதல் நாடு என்ற புகழை அடைய இந்தியா முயல்கிறது.

எனினும், ஆகஸ்ட் 11ஆம் தேதி ரஷ்யாவால் ஏவப்பட்ட லூனா 25 விண்கலமும், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதற்காகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

லூனா 25இல் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரஷ்ய விண்வெளி நிறுவனம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

அனைத்தும் விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி நடந்தால், ஆகஸ்ட் 21 அன்று நிலவின் தென் துருவத்தில் ரஷ்யாவின் லூனா தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த முயற்சியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது முந்தித் தரையிறங்குவது மட்டுமே போதுமானது அல்ல.

சந்திரயான் 3 மூலம் நிலவின் தென் துருவத்தில் மென்மையாகத் தரையிறங்கும் முதல் நாடு என்ற புகழை அடைய இந்தியா முயல்கிறது.
நிலாவில் இஸ்ரோ ஆய்வு செய்ய முயல்வது ஏன்?

நிலாதான் சூரிய குடும்பத்தில் பூமிக்கு மிக அருகில் உள்ள வான்பொருள். அதனால்தான் நிலாவில் ஆய்வு செய்ய அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆரம்பம் முதலே போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் அப்போதைய சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே விண்வெளிப் போர் தொடங்கியது. இப்போது அந்தப் போட்டி ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தொடர்ந்து வருகிறது.

அப்போதைய சோவியத் ஒன்றியம்1955இல் சோவியத் விண்வெளித் திட்டத்தைத் தொடங்கியது. அமெரிக்காவும் 1958இல் தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் ஏஜென்சியான நாசாவை அறிமுகப்படுத்தியது.

இந்த போட்டி ஆரம்ப காலத்தில் செயற்கைக்கோள் அறிமுகத்துடன் தொடங்கியது. பின்னாளில், நிலா, செவ்வாய், மற்ற வேற்று கிரக ஆய்வுகள் மற்றும் மனித விண்வெளிப் பயணங்கள் என அந்த முயற்சிகளும், போட்டிகளும் அடுத்தடுத்த கட்டத்தைத் தொட்டன.

இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற சில நாடுகள் நிலவில் பலமுறை இறங்கியுள்ளன.

கடந்த 1959ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதி மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கலன் நிலவில் தரையிறங்கியது.

அப்போதைய சோவியத் ரஷ்யாவின் லூனா 2 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதன்மூலம் சந்திரனில் தரையிறங்கிய மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாக லூனா 2 வரலாறு படைத்தது.

லூனா 2 நிலவில் இறங்கிய பிறகு, அது நிலவின் மேற்பரப்பு, கதிர்வீச்சு மற்றும் காந்தவீச்சுகளைப் பற்றிய தகவல்களை வழங்கியது. இந்த வரலாற்று சாதனை, நிலவில் மேலும் பல ஆராய்ச்சிகளை முன்னெடுக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

1959ஆம் ஆண்டு, செப்டம்பர் 14ஆம் தேதி மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கலன் நிலவில் தரையிறங்கியது.

இந்த வெற்றி நிலவில் மேலும் பல ஆய்வுகளுக்காக மனிதர்களை அனுப்புவதற்கும் வழி வகுத்தது.

நாசாவால் ஏவப்பட்ட பெரும்பாலான அப்பல்லோ பயணங்கள், மனிதர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணங்கள் மற்றும் ரஷ்யா மேற்கொண்ட லூனா பயணங்கள் ஆகியவை நிலவின் பூமத்திய ரேகைக்கு (Equator) அருகில் மட்டுமே தரையிறங்கின.

நிலாவுக்குச் செல்ல விரும்பிய அனைத்து சோதனைகளிலும், அவர்கள் நிலாவின் மத்திய ரேகைக்கு அருகில் மட்டுமே தரையிறங்க முடிந்தது. ஏனெனில் நிலவின் பூமத்திய ரேகைக்கு அருகில் தரையிறங்குவது மிகவும் எளிது.

நிலாவின் மத்திய ரேகைக்கு அருகில், தொழில்நுட்ப அதிர்வுகள் மற்றும் செயல்படத் தேவையான பிற உபகரணங்கள் நேரடியாக சூரிய ஒளியைப் பெறுகின்றன.

இங்குள்ள வெளிச்சம் இரவு நேரத்திலும் தெளிவாகத் தெரியும். அதனால்தான் அந்தந்த நாடுகளால் ஏவப்பட்ட அனைத்து ஆய்வுகளும், விண்வெளி வீரர்களும் நிலவின் பூமத்திய ரேகைக்கு அருகில் தரையிறக்கப்பட்டன.

நிலவில் சூரிய ஒளி வராத பகுதிகள் நிரந்தர நிழல் உள்ள பகுதிகளாக உள்ளன.

பூமியின் அச்சு 23.5 டிகிரி சாய்ந்துள்ளது. இதனால் துருவங்களின் அருகில் ஆறு மாதங்கள் பகல், ஆறு மாதங்கள் இருள் சூழ்ந்திருக்கும்.

ஆனால் சந்திரனின் அச்சு சூரியனுக்கு கிட்டத்தட்ட சரியான கோணத்தில் உள்ளது.

நாசாவின் கூற்றுப்படி, சந்திரனின் அச்சு 88.5 டிகிரி செங்குத்தாக உள்ளது. அதாவது ஒன்றரை டிகிரி வளைவு மட்டுமே.

சந்திரனின் துருவப் பகுதிகளில் சூரியக் கதிர்கள் பட்டாலும் அங்குள்ள பள்ளங்களின் ஆழத்தை சூரியக் கதிர்களால் அடைய முடியாது.

இதனால், சந்திரனின் துருவப் பகுதியில் உள்ள பள்ளங்கள் சுமார் இரண்டு பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளி படாமல் மிகவும் குளிரான நிலையில் உள்ளன.

சந்திரனில் சூரிய ஒளி வராத பகுதிகள் நிரந்தரமாக நிழலான, இருள் சூழ்ந்த பகுதிகளாக உள்ளன.

அத்தகைய பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 230 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கும்.

அத்தகைய இடங்களில் தரையிறங்குவது மற்றும் தொழில்நுட்ப பரிசோதனைகளை நடத்துவது மிகவும் கடினம்.

நிலாவில் உள்ள பள்ளங்கள் மிகவும் அகலமானவை. அந்த பள்ளங்கள் சில நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் விட்டம் (Diameter) கொண்டவை.

இவ்வளவு சிரமங்களும் கடினமான சூழ்நிலைகளும் இருந்தபோதிலும், 70வது அட்சரேகைக்கு (Latitude) அருகில் உள்ள தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் எனப்படும் தரையிறங்கி கலனை மென்மையாகத் தரையிறக்க இஸ்ரோ முயல்கிறது.

தென்துருவத்தில் தரையிறங்கிக் கலன் மற்றும் ஊர்திக் கலனை நேரடியாக அனுப்புவதன் மூலம், சந்திரனைப் பற்றி மேலும் புதிய தகவல்களை அறிய முடியும்.

சந்திரனின் பூமத்திய ரேகைக்கு அருகில் பகல்நேர வெப்பநிலையில் வேறுபாடுகள் அதிகமாக இருக்கும்.

இங்கு இரவில் மைனஸ் 120 டிகிரி செல்சியஸாகவும், பகலில் 180 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.

ஆனால் துருவங்களில், பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளி பெறாத சில பகுதிகளில் மைனஸ் 230 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்க வாய்ப்புள்ளது.

அதாவது இங்கு மண்ணில் படிந்த பொருட்கள், பல லட்சம் ஆண்டுகளாக அப்படியே இருக்கின்றன.

அவற்றைக் கண்டுபிடிக்க இஸ்ரோ நேரடியாக தென் துருவத்தின் அருகே தரையிறங்க முயல்கிறது.

தரையிறங்கிக் கலன் மற்றும் ஊர்தி கலனை இங்கு தரையிறக்கி, அங்குள்ள மண்ணை ஆய்வு செய்யும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

தென் துருவத்திற்கு அருகிலுள்ள மண்ணில் உறைந்த பனிக்கட்டியின் மூலக்கூறுகளைக் கண்டறியவும் முயல்கிறது.

இப்படி உறைந்த நிலையில் பல விஷயங்கள் கிடக்கின்றன. அதாவது, சூரிய குடும்பத்தின் பிறப்பு, சந்திரன் மற்றும் பூமியினுடைய பிறப்பின் ரகசியங்கள், சந்திரன் எப்படி உருவானது, அது உருவானபோது என்ன சூழ்நிலைகள் இருந்தன என்பதையும் இந்த ஆய்வின் மூலம் அறியலாம்.

இந்தத் தகவலின் மூலம் நிலா உருவானதற்கான காரணங்கள், அதன் நிலவியல் பண்புகள் ஆகியவற்றையும் அறிய முடியும்.

அத்தகைய குளிர்ந்த வெப்பநிலையால் உறைந்த நிலத்திலும் பனி மூலக்கூறுகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.

சந்திரயான் 1இல் இஸ்ரோவால் ஏவப்பட்ட விண்கலம் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கியது. அதனால், அந்த விண்கலத்தில் இருந்த சென்சார் மூலம் மினராலஜி மேப்பரால் (Mineralogy mapper) நிலவில் நீர் தடயங்களைக் கண்டறிய முடிந்தது.

இப்போது, தரையிறங்கி கலன் மற்றும் ஊர்தி கலனை நேரடியாக அதே பகுதிக்கு அனுப்புவதன் மூலம், சந்திரனை பற்றி மேலும் புதிய தகவல்களை அறிய முடியும்.

1990களில், நிலவின் இருண்ட பகுதியில் உறைந்த பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

நாசா வெளியிட்டுள்ள விவரங்களின்படி, அப்போலோ 11 விண்கலத்தின் மூலம் சந்திரனில் இருந்து சந்திர பாறைகளை பூமிக்கு நாசா கொண்டு வந்தது.

நிலவின் பாறைகளை ஆய்வு செய்த நாசா, அவற்றில் தண்ணீரின் தடயங்கள் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்தது. அவற்றை ஆய்வு செய்த நாசா விஞ்ஞானிகள், நிலவின் மேற்பரப்பு முற்றிலும் வறண்டுவிட்டதாகவும் முடிவு செய்தது.

அதன் பிறகு, சில தசாப்தங்களாக நிலவில் நீரின் தடயங்களைக் கண்டறிய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

பிறகு 1990களில், நிலவின் இருண்ட பகுதியில் உறைந்த பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதன் விளைவாக, நாசாவின் க்ளெமெண்டைன் மிஷன் (Clementine Mission), லூனார் ப்ராஸ்பெக்டர் மிஷன் (Lunar Prospector Mission), நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்து, சூரிய ஒளி சந்திரனை அடையாத பகுதிகளில் ஹைட்ரஜன்(Hydrogen) இருப்பதைக் கண்டறிந்தது.

அதன் முடிவுகள் நிலவின் துருவங்களுக்கு அருகில் தண்ணீர் இருக்கலாம் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது. ஆனால், தண்ணீரின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

நவம்பர் 18, 2008 அன்று சந்திரயான்-1 100 கி.மீ உயரத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஆய்வின்போது விண்கலன் 25 நிமிடங்களில் நிலவின் தென் துருவத்தைச் சென்றடைந்தது.

ஆனால் அது தரையிறங்கிக் கலனைப் போல பாதுகாப்பாகத் தரையிறங்கவில்லை. இஸ்ரோவால் அதை நிலவின் தென் துருவத்தில் விழ வைக்கவே முடிந்தது.

சந்திராஸ் ஆல்டிடியூட் காம்போசிஷன் எக்ஸ்ப்ளோரர்(Chandras Altitute Composition Explorer) மூலம் சந்திரனின் தாக்க ஆய்வு செய்த இஸ்ரோ 2009 செப்டம்பர் 25 அன்று நிலவில் தண்ணீர் இருப்பதாக அறிவித்தது.

தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற முத்திரையைப் பதிக்க இஸ்ரோவும் முயற்சி செய்து வருகிறது

வரலாற்றில் இதற்கு முன் சாதித்தவர்களின் பெயர்கள் நினைவுகூரப்படுகின்றன. நிலவில் தனது ஆய்வுக் கருவியை முதன்முதலில் அனுப்பியது ரஷ்யா என்றாலும், நிலவில் முதலில் காலடி வைத்தது அமெரிக்காதான்.

அனைத்து நாடுகளும் விண்வெளி ஆய்வில் தாங்கள் முன்னோக்கி இருப்பதை நிரூபிக்க முயல்கின்றன. அதனால் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற முத்திரையைப் பதிக்க இஸ்ரோவும் முயற்சி செய்து வருகிறது.

தென் துருவத்தில் உறைந்த மண்ணில் நீரின் தடயங்களை சந்திரயான்-3 கண்டறிந்தால், அது எதிர்கால சோதனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நிலவில் உள்ள தண்ணீரைக் கண்டறிந்தால், அதில் இருந்து ஆக்ஸிஜனையும் உருவாக்கலாம். அங்கு மனிதர்கள் வசிக்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்கு இது பயனுள்ளதாகவும் இருக்கும்.

அதுமட்டுமின்றி, ஆக்சிஜனை விண்வெளிப் பரிசோதனைகள் மற்றும் சந்திரனில் நடக்கும் பிற சோதனைகளுக்கு உந்துசக்தியாகவும் பயன்படுத்தலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ஆரம்பம் முதலே இஸ்ரோ தயாராகி வருகிறது. சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 2இல் இதே போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது சந்திரயான்-3 மூலம் சரித்திரம் படைக்க இந்தியா தயாராகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.