உக்ரைன் மீது மீண்டும் ரஷிய ஏவுகணை தாக்குதல் – ஏழு பேர் பலி!!
கடந்த 2022 பிப்ரவரி மாதம் 22 அன்று, சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை கடுமையாக எதிர்த்து, ஆக்ரமிப்புக்கு பணிய மறுத்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளதவியுடனும், ராணுவ உதவியுடனும் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக போரிட்டு வருகிறது.
இப்போரில் இரு நாடுகளிலும் கடும் உயிர்ச்சேதங்களும், கட்டிட சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. போர் 18 மாதங்களுக்கு மேலாக 540 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் கடல் டிரோன்கள் மூலம் பரஸ்பரம் தாக்கி வருகின்றனர். இந்நிலையில் ரஷியா மீண்டும் உக்ரைன் மீது ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் தலைநகர் கீவிற்கு வடக்கில் 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செர்னிஹிவ் நகரம். இந்நகரம் இரு பக்கமும் அழகான மரங்கள் நிறைந்த சாலைகளுக்கும், நூற்றாண்டு கால பழமையான தேவாலயங்கள் புகழ் பெற்றது. இந்நகரின் மத்தியில் உள்ள ஒரு சதுக்கத்தின் அருகே ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில், மத விடுமுறையை கொண்டாட அப்பகுதியில் உள்ள ஒரு சர்ச்சிற்கு சென்று கொண்டிருந்த மக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் 6-வயது குழந்தை ஒன்றும் அடங்கும். 90 பேர் காயமடைந்துள்ளனர். அவற்றில் 12 பேர் குழந்தைகள் மற்றும் 10 பேர் காவல் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
“ரஷியாவின் தாக்குதலில் அந்நகரில் அந்த சதுக்கம், ஒரு பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் மற்றும் கலையரங்கம் ஆகியவை சேதமடைந்துள்ளன” என சுவீடன் நாட்டிற்கு சென்றிருக்கும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இப்போரினால் உலகளாவிய பொருளாதாரமும், உணவு தானிய வினியோகமும் பெருமளவில் வீழ்ச்சியடைந்து விட்டது. இதனால் போர் விரைவில் முடிவிற்கு வந்து அமைதி திரும்ப வேண்டும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.