இந்தியாவில் நிதி பரிவர்த்தனைகளில் புரட்சி: ஜி 20 டிஜிட்டல் பொருளாதார கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!!
ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில் மந்திரிகளுக்கான பல்வேறு கூட்டங்களை இந்தியா நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜி 20 நாடுகளின் டிஜிட்டல் பொருளாதார பணிக்குழு மந்திரிகளின் கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று நடந்தது. இதில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:- இந்தியா ஒரு நம்ப முடியாத பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். எங்களிடம் டஜன் கணக்கான மொழிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பேச்சு வழக்குகள் உள்ளன. இது உலகில் உள்ள ஒவ்வொரு மதத்திற்கும் எண்ணற்ற கலாச்சார நடைமுறைகளுக்கும் சொந்தமானது. பண்டைய மரபுகள் முதல் சமீபத்திய தொழில்நுட்பம் வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரிடம் சென்றடைந்து இருக்கிறது.
தீர்வுகளுக்கான சிறந்த சோதனை ஆய்வகம் இந்தியாவாகும். இங்கு வெற்றிபெறும் ஒரு தீர்வை உலகில் எங்கும் எளிதாக பயன்படுத்தலாம். இந்தியா தனது அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறது. டிஜிட்டல் பொருளாதாரம் பரவுவதால் அது பாதுகாப்பு அச்சுறுத்தல், சவால்களை எதிர்கொள்ளும். பாதுகாப்பான டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான ஒருமித்த கருத்தை உருவாக்குவது முக்கியம். வளமான மற்றும் பாதுகாப்பான உலகளாவிய டிஜிட்டல் எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைப்பதற்கு ஜி 20யில் எங்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பு இருக்கிறது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மூலம் நிதி உள்ளடக்கம் மற்றும் உற்பத்தி திறனை நாம் பெற முடியும். டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்திய அரசு பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஜன்தன் வங்கி கணக்குகள், ஆதார் மற்றும் செல்போன்கள் ஆகிய மூன்றும் நிதி பரிவர்த்தனைகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் நாங்கள் மொழி பெயர்ப்புதளமான ‘பாஷினி’யை உருவாக்கி வருகிறோம். இது இந்தியாவின் பல்வேறு மொழிகளில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஆதரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.