;
Athirady Tamil News

லாட்டரி அலுவலகத்தை சூறையாடிய முகவர்- அரை நிர்வாணமாக ரகளை செய்தவரை போலீசார் கைது செய்தனர்!!

0

கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் அரசு மூலமாகவே விற்கப்படுகின்றன. புத்தாண்டு, ஓணம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நடத்தப்படும் பம்பர் குலுக்கல் மிகவும் பிரபலமாகும். அதில் வாடிக்கையாளர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. இதனால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான தமிழகம் மற்றும் கேரளாவுக்கு சுற்றுலா வரக்கூடிய வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கேரள லாட்டரி சீட்டுகளை வாங்கிச் செல்வார்கள். பரிசுத்தொகை கோடி, லட்சம், ஆயிரம் என வழங்கப்படுவதால் அனைத்து தரப்பினரும் லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள்.

இவ்வாறு லாட்டரி சீட்டுகளை வாங்கிய தன் மூலம் அதிக பரிசுத் தொகையை பெற்று பலரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது. பண்டிகை காலங்களில் நடத்தப்படும் சிறப்பு குலுக்கலில் ஒரு லாட்டரி டிக்கெட்டே அதிக விலைக்கு விற்கப்படும். அப்படிப்பட்ட நேரத்தில் கஷ்டப்பட்டவர்கள் குழு வாக ஒன்றிணைந்து லாட்டரி சீட்டை வாங்குகிறார்கள். அப்படி வாங்கி லட்சக்கணக்கில் பரிசுத்தொகையை வென்றவர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் துப்புரவு தொழில் செய்யும் 11 பெண்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு குலுக்கலில் அதிகத்தொகை கிடைத்தது. குலுக்கலில் ஏராளமானோருக்கு பரிசு வழங்கப்படுவதால் எப்படியும் பரிசு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பலர் சிறப்பு குலுக்கலின்போது லாட்டரி சீட்டுகள் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

அப்படி லாட்டரி சீட்டுகளை வாங்கியபடி இருந்த ஒருவர், குலுக்கலில் தனக்கு பரிசு விழாத ஆத்திரத்ததில் லாட்டரி அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கிறார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பத்தினம்திட்டா மாவட்டம் நாரங்கனம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது45). லாட்டரி ஏஜெண்டாக பணிபுரிந்து வரும் இவர், லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்காக மாவட்ட லாட்டரி அலுவலகத்திற்கு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ வந்து சென்றிருக்கிறார். இந்நிலையில் அவர் சட்டை அணியாமல் காவி வேட்டி மட்டும் அணிந்தபடி அரை நிர்வாண கோலத்தில் மாவட்ட லாட்டரி அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கிருந்த ஊழியர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், திடீரென அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பிரிண் டரை தூக்கியெறிந்து உடைத்தார். மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார். அது மட்டுமின்றி அலுவலகத்துக்கு தீ வைத்து விடுவதாக மிரட்டர் விடுத்தார். கிருஷ்ண குமாரின் இந்த செயலால் லாட்டரி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெண் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.

இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்ட கிருஷ்ணகுமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதிர்ஷ்ட குலுக்கலில் தனக்கு பரிசு விழாத ஆத்திரத்தில் லாட்டரி அலுவலத்தை கிருஷ்ணகுமார் அடித்து உடைத்து சூறையாடியது தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ண குமார் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.