டாலருக்குப் பதிலாக ரூபாய்: இந்தியா – யு.ஏ.இ. ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு என்ன பிரச்னை?
இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அமெரிக்க டாலருக்கு பதிலாக பரஸ்பர நாணயத்தில் இருதரப்பு வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
மத்திய கிழக்குப்பகுதியில் எண்ணெய் உற்பத்தி நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனத்திடம் இருந்து இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன், பத்து லட்சம் பீப்பாய்கள் எண்ணெயை இந்திய ரூபாயை கொடுத்து வாங்கியுள்ளதாக இந்திய அரசு கடந்த திங்களன்று தெரிவித்தது.
இதுவரை எண்ணெய் வணிகம் அமெரிக்க டாலரில்தான் நடந்து வந்தது.
இதற்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த தங்க வியாபாரி ஒருவர், இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு 25 கிலோ தங்கத்தை 12.8 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு விற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோதி கடந்த ஜூலை மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றிருந்தார். அப்போது தத்தமது நாணயத்தில் வணிகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் பரஸ்பர நாணயத்தில் இருதரப்பு வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
இது மட்டுமின்றி இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் தங்களது டிஜிட்டல் பேமெண்ட் முறைகளான UPI ஐயும், உடனடி பணம் செலுத்தும் தளத்தையும் இணைக்க ஒப்புதல் அளித்துள்ளன.
வலுவடையும் இந்திய – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.) உறவு
2022 ஆம் ஆண்டில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே ஒரு சிஐபி(CIP) அதாவது விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையே வணிகத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் எந்தவொரு நாட்டுடனும் இந்தியா மேற்கொண்ட முதல் கட்டுப்பாடற்ற வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும்.
முன்னதாக 2011-ம் ஆண்டு ஜப்பானுடன் இந்தியா இதேபோன்ற இருதரப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இந்தியா அதிக வர்த்தகம் செய்கிறது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இந்தியா அதிக ஏற்றுமதி செய்கிறது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.) இடையேயான ஆண்டு வர்த்தகம் 85 பில்லியன் டாலரில் இருந்து 100 பில்லியன் டாலராக உயரும் என்று இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதி கூறியிருந்தார்.
இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்தியாவில் நான்காவது பெரிய முதலீட்டாளராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது
தற்போது இந்தியாவில் நான்காவது பெரிய முதலீட்டாளராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது. இந்தியாவில் அதன் முதலீடு 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.
2020-21ஆம் ஆண்டில் இந்தியாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதலீடு 1.03 பில்லியன் டாலர்கள் மட்டுமே இருந்தது என்ற விஷயத்திலிருந்தே, முதலீடு அதிகரித்து வரும் வேகத்தைப் புரிந்து கொள்ளலாம்.
பிரதமர் நரேந்திர மோதி கடந்த 8 ஆண்டுகளில் ஐந்து முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளார்.
“பிரதமர் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்த பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வளைகுடா நாடுகளுடனான உறவில் சிறப்பு கவனம் செலுத்தினார்,” என்று இந்திய உலக விவகாரங்கள் சபையின் உறுப்பினரும், மத்திய கிழக்கு விவகாரங்களில் நிபுணருமான ஃபஸூர் ரஹ்மான் சித்திக்கி குறிப்பிட்டார்.
“கடந்த எட்டு முதல் பத்து ஆண்டுகளில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான இருதரப்பு உறவுகளின் மையமாக வணிகம் ஆகியுள்ளது. முன்பு அரசியல் செயல் உத்தி நடந்து கொண்டிருந்தது. ஆனால் மோதிஅரசு வந்த பிறகு இப்போது வணிக செயல் உத்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியா தனது செல்வாக்கை அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளர்களுடனான உறவையும் வலுப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவில் முதலீடுகளை அதிகரித்து வருகிறது
“ரூபாய் மற்றும் திர்ஹாமில் தொழில் தொடங்குவது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் அடையாளமாகும்” என்று சித்திக்கி கூறுகிறார்.
அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவில் முதலீடுகளை அதிகரித்து வருகிறது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா இயக்கங்களில் முதலீட்டு வாய்ப்புகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காண்கிறது.
“இந்தியாவின் பல துறைகளும் முதலீடுகளுக்கு திறக்கப்பட்டு வருகின்றன. வளைகுடா நாடுகளில் நிறைய பணம் இருக்கிறது. இந்தப் பணத்தை இந்தியா தன்னை நோக்கி ஈர்க்க முடியும். பாதுகாப்புத்துறையில் கூட கூட்டு உற்பத்தி யோசனையை இந்தியா முன்வைத்துள்ளது,” என்று சித்திக்கி குறிப்பிட்டார்.
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரித்து வருகின்றன.
இந்தியாவின் பெரிய அளவிலான வர்த்தகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக செய்யப்படுகிறது
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாகும்.
இந்தியாவின் பெரிய அளவிலான வர்த்தகம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக செய்யப்படுகிறது. அது இந்தியாவின் வணிகத்திற்கான நுழைவு வாயிலாக கருதப்படுகிறது.
உதாரணமாக பாகிஸ்தானுடன் இந்தியா சுமார் 5 பில்லியன் டாலர் வர்த்தகத்தை துபாய் வழியாக செய்கிறது.
ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல நாடுகளுடன் இந்தியா துபாய் வழியாகவே வர்த்தகம் செய்கிறது.
“ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சமீபத்தில் சீன நாணயமான யுவானை கொடுத்து எண்ணெய் வாங்கியது. இந்தப் பரிவர்த்தனையும் துபாய் வழியாகவே நடந்தது. இத்தகைய வணிகம் செய்வது ஒரு நல்ல தொடக்கம். மற்ற நாடுகளுடனும் இந்தியா இதைச் செய்ய வேண்டும்,” என்று மூத்த செய்தியாளரும் எரியாற்றல் நிபுணருமான நரேந்திர தனேஜா கூறினார்.
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே டாலருக்கு பதிலாக ரூபாய் மற்றும் திர்ஹாமில் வர்த்தகம் தொடங்கியிருப்பது உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்க டாலர் செலுத்தும் ஆதிக்கத்தின் மீது விழுந்துள்ள அடியாகவும் கருதப்படுகிறது.
“டீடாலரைசேஷன் அலை (டாலருக்கு பதிலாக வேறு நாணயத்தை பயன்படுத்துவது) நடந்து கொண்டிருக்கிறது, சீனாவும் இதை முயற்சிக்கிறது. முன்னதாக லிபியாவின் ஆட்சியாளரான கர்னல் கதாஃபி தனது காலத்தில் டாலர் அல்லாத நாணயங்களில் எண்ணெய் விற்க முன்வந்தார். இப்போது இந்தியா உட்பட பல நாடுகள் இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன,” என்று ஃபஸூர் ரஹ்மான் சித்திக்கி தெரிவித்தார்.
“ரஷ்யா, சிரியா மற்றும் இரான் போன்ற நாடுகள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு மற்ற நாடுகள் பயந்துபோயுள்ளன. தங்கள் வணிகத்திற்கு முழுமையாக டாலரை சார்ந்திருக்க அவை விரும்பவில்லை. புதிய மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க அவை விரும்புகின்றன,” என்றார் சித்திக்.
சீனாவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் தனது நாணயத்தில் வர்த்தகம் செய்கிறது. சீனா இரானுடனும் அதையே செய்கிறது.
இவை அனைத்தும் உலக சந்தையில் அமெரிக்க டாலரின் செல்வாக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்கிறார் அவர்.
டாலருக்கு நிகரான வலு இல்லாவிட்டாலும் இப்போது இந்திய ரூபாய் வலுவான கரன்ஸியாக கருதப்படுகிறது
“இது ஒரு நல்ல தொடக்கம். ஆனால் இது டாலருக்கு மாற்றாக ஆகும் என்று கூறுவது அவசரத்தனமாக இருக்கும்” என்று நரேந்திர தனேஜா குறிப்பிட்டார்.
“ டாலருக்கு நிகரான வலு இல்லாவிட்டாலும் இப்போது இந்திய ரூபாய் வலுவான கரன்ஸியாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் இந்திய ரூபாயின் சர்வதேசமயமாக்கல் நடைபெறுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான ஒப்பந்தத்தையும் அதே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.”
“ஆனால் உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகம் ரூபாயில் அல்லது திர்ஹாமில் தொடங்கும் என்று இதன் அடிப்படையில் கூற முடியாது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நாணயமான திர்ஹாமும் டாலரால் ஆதரிக்கப்படுகிறது. எனவே ரூபாய் மூலமான பரிவர்த்தனை, அமெரிக்க டாலரின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுவது அவசரத்தனமாக இருக்கும்,” என்று தனேஜா கூறினார்.
இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான ரூபாய் வர்த்தகத்தின் காரணமாக மற்ற நாடுகளிலும் ரூபாயின் அங்கீகாரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
“எண்ணெய் வாங்குவதற்கு ரூபாயில் பணம் செலுத்த முடிந்தால் இந்தியாவுக்கு அது மிகவும் நன்மை தரும். ஏனென்றால் எண்ணெய்க்காக டாலர்களை வாங்க இந்தியா டிரில்லியன் கணக்கான ரூபாய்களை இப்போது செலவழிக்க வேண்டியுள்ளது. எல்லா எண்ணெய் விற்பனை செய்யும் நாடுகளிடமிருந்தும் இந்தியா தனது சொந்த நாணயத்தில் எண்ணெய் வாங்க முடிந்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா அத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,” என்று தனேஜா கூறுகிறார்.
”இந்தியா மற்றும் துபாய் இடையே ரூபாய் பரிவர்த்தனைகள் அதிகரித்தால், மற்ற நாடுகளும் அதை அதிகமாக ஏற்றுக் கொள்ளும். இது உலக அளவில் ரூபாயை வலுப்படுத்தும்,” என்றும் தனேஜா குறிப்பிட்டார்.
“துபாய் மூலம் நடைபெறும் வணிகத்தின் ஒரு பகுதி திர்ஹாம் அல்லது ரூபாயில் இருக்க வேண்டும் என்று இந்தியா கண்டிப்பாக விரும்புகிறது. ஆனால் தற்போது பரிவர்த்தனைகள் முழுவதும் ரூபாய் அல்லது திர்ஹாமில் நடக்கும் என்று சொல்ல முடியாது. இனிவரும் காலங்களில் ரூபாயின் ஏற்புத்தன்மை அதிகரிக்கும் என்பது உறுதி. இருப்பினும் துபாய் மற்றும் அபுதாபி சந்தைகளில் ஏற்கனவே ரூபாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது,” என்றார் அவர்.
80 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வாழ்கின்றனர். இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுமார் ஒரு கோடி மக்கள் தொகையில், 35 சதவிகிதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். “இந்திய மக்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு” என்கிறார் சித்திக்கி.
இவர்கள் தங்கள் வருவாயில் இருந்து ஆண்டுக்கு சுமார் 55 பில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இந்தப் பணம் தொடர்ந்து டாலரில் வர வேண்டும் என்று அரசு விரும்புகிறது என்று தனேஜா கருதுகிறார்.
“இந்தப் பணம் டாலரில் வர வேண்டும் என்று அரசு விரும்புகிறது. ஏனெனில் இந்தியா அதன் மூலம் மதிப்பு கொண்ட கரன்ஸியை பெறுகிறது. அது நன்மை தருகிறது. மத்திய கிழக்கிலிருந்து இந்தியர்கள் மூலம் வரும் டாலர் அல்லது யூரோ இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கிறது,” என்று தனேஜா சுட்டிக்காட்டினார்.
இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் உடனடி பணம் செலுத்து இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிவர்த்தனைகள் எளிதாகும்.