மசாலா பொடியில் விஷம் கலந்து மனைவியை குடும்பத்துடன் கொலை செய்ய முயற்சி- என்ஜினீயரின் சதியால் உயிரிழந்த மாமியார்!!
தெலுங்கானா மாநிலம், தராபாத், மியாபுர் கோகுல் அப்பார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் அனுமந்த ராவ். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது மகள் ஷிரிஷா. டாக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் சாப்ட்வேர் என்ஜினீயரான அசோக்குமாருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் லண்டனுக்கு சென்று வேலை செய்து வந்தனர். லண்டனுக்கு சென்ற சிறிது நாட்களில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வந்தனர்.
மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரத்தில் இருந்த அசோக் குமார் மனைவி மற்றும் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கொல்ல வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி தன்னிடம் வேலை செய்த வினோத்குமாரை அணுகி ஆலோசனை கேட்டார். இந்த நிலையில் ஷிரிஷாவின் குடும்பத்தினர் திருமணத்திற்காக ஐதராபாத் வந்தனர். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அசோக் குமார் முடிவு செய்தார். அதன்படி கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி 3 நபர்களை விஷ ஊசி செலுத்தி கொலை செய்ய அனுப்பி வைத்தார்.
அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியின் மகன் ரமேஷ் மூலம் மசாலா பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவைகளில் மெதுவாக கொள்ளும் விஷத்தை கலந்து மனைவியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். விஷம் கலந்த மசாலா பொருட்களில் சமையல் செய்து சாப்பிட்டதால் ஷிரிஷாவின் தந்தை, தாய், சகோதரர் மற்றும் உறவினர்கள் என 6 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கை கால்கள் செயலிழந்தன. மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஷிரிஷாவின் தாய் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சோதனை முடிவில் மசாலா பொருட்களில் மெதுவாக கொல்லும் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஷிரிஷா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில் காவலாளி மகன் ரமேஷ் மசாலா பொருட்கள் கொடுத்தது தெரியவந்தது. போலீசார் ரமேஷை பிடித்து விசாரணை செய்ததில் அசோக்குமார் கூறியபடி பூர்ணேந்திர ராவ் விஷம் கலந்த மசாலா பொருட்களை கொடுத்து அனுப்பியது தெரிய வந்தது. போலீசார் இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர். மேலும் லண்டனில் உள்ள ஷிரிஷாவின் கணவர் அசோக் குமாரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.