அகிலேஷ் யாதவை சந்தித்தார் ரஜினிகாந்த்!!
நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸூக்கு முன்பே இமயமலைக்கு சென்றார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமம், ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமம், பத்ரிநாத் கோவில் போன்ற பல இடங்களுக்கு ரஜினி சென்றார். தொடர்ந்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் ஆகியோரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச மாநில துணை முதல் மந்திரி கேஷவ் பிரசாத் மவுரியாவுடன் ‘ஜெயிலர்’ திரைப்படம் பார்த்துள்ளார்.
இதையடுத்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார். இந்நிலையில், இன்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பின் வெளியே வந்த ரஜினிகாந்த், “9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் செல்போனில் பேசிக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தபோது அவர் இங்கு இல்லை. அதனால் இப்போது அவரை சந்தித்தேன்” என்றார்.