திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாத தரிசன டிக்கெட் வெளியீடு!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை அட்டவணைப்படி திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் நேற்று காலை 10 மணி முதல் 21-ந் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தி தங்களின் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 22-ந் தேதி காலை 10 மணிக்கு கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீபாலங்கர சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படும். வர்ச்சுவல் சேவை டிக்கெட்டுகள் 22-ந் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சணம் டோக்கன்களின் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தொடர்புடைய பிரேக் தரிசன டிக்கெட்டுகள், 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் 23-ந்தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். 24-ந் தேதி காலை 10 மணிக்கு ரூ. 300 சிறப்பு விரைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. திருமலை மற்றும் திருப்பதியில் அறைகளுக்கான முன்பதிவு 25-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 19,242 பேர் தரிசனம் செய்தனர். 36,039 பக்தர்கள் முடிகாணக்கை செலுத்தினர். ரூ.4.76 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.