சித்தூர் அருகே காட்டு யானை மிதித்து விவசாயி பலி!!
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பெத்தகாணி மண்டலம், முடி ரெட்டி பள்ளியை சேர்ந்தவர் மார்கொண்டைய்யா (வயது52). விவசாயி. இவரது மனைவி அருணம்மா. மார்கொண்டைய்யாக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. நேற்று காலை கணவன் மனைவி இருவரும் நிலத்திற்கு சென்று விவசாய பணிகளை செய்தனர். பின்னர் பணிகள் முடிந்து மாலை இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை யானை ஒன்று இருவரையும் வழிமறித்து துரத்தியது. கணவன் மனைவி இருவரும் யானையிடமிருந்து உயிர் பிழைக்க அலறி அடித்தபடி தப்பி ஓடினர்.
ஆக்ரோஷத்துடன் இருந்த யானை இருவரையும் விடாமல் துரத்திச் சென்றது. அப்போது மார்கொண்டைய்யா கால் தவறி கீழே விழுந்தார். ஆவேசமாக இருந்த யானை அவரை காலால் மிதித்து கொன்றது. பின்னர் துதிக்கையால் தூக்கி வீசியது. இதனைக் கண்ட அருணம்மா பதறி அடித்தபடி கிராமத்திற்கு சென்று தகவல் தெரிவித்தார். கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தபோது மார்கொண்டைய்யா இறந்து கிடந்தார். அவரை மிதித்து கொன்ற யானை வனப்பகுதிக்கு சென்றது தெரிய வந்தது.
கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மார்கொண்டைய்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெத்தகாணி மண்டலத்தில் இதுவரை 3 பேரை யானைகள் மிதித்து கொன்று உள்ளன. வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையின நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.