தமிழ்த் தேசிய எழுச்சிக்காய் தன்னை அர்ப்பணித்தவர் குமாரசாமி அவர்கள் – அஞ்சலி உரையில் நிரோஷ்!!
தனது ஆற்றலை உத்தியோகத்துடன் மட்டும் மட்டுப் படுத்திவிடாது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்கு அர்ப்பணித்து சேவையாற்றிய மதிப்பிற்குரிய ஒருவராக அமரத்துவமடைந்த சங்கீதபூசணம் செல்லத்துரை குமாரசாமி அவர்கள் மதிக்கப்படுகின்றார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
பூத்தகொடி பூக்களின்றித் தவிக்கின்றது மற்றும் போரம்மா உள்ளிட்ட பல தாயக எழுச்சிப் பாடல்களை இசைத்தவரும் ஓய்வுபெற்ற கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபருமான செ.குமாரசாமி அவர்களுக்கான இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளை தலைமையில் உடுப்பிட்டியில் நடைபெற்றது.
இதில் அஞ்சலியுரை ஆற்றுகையிலேயே வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் நியாயங்களையும் உணர்வுகளையும் பகிர்வதற்கு எழுச்சிப் பாடல்கள் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளன. ஒரு இனத்தின் அரசியல், விடுதலை, பொருளாதாரம், இனத்தின் அடையாளம்;, கலாசாரம், பண்பாடு என எதுவாக இருப்பினும் எதிர்காலத் தலைமுறைக்கு ஊடுகடத்துவதற்கு இசை முக்கிய மூலமாக அமைகின்றது.
இந் நிலையில் யதார்த்த பூர்வமாக தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் தேசிய பற்றுறுதியினை கட்டிக்காப்பதிலும் அமரர் குமாரசாமி அவர்களுடைய பங்களிப்பு அளவிடமுடியாதது. அவர் ஓர் அரச கல்விச் சேவையாளராக ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபராக பதவி வகித்ததுடன் மட்டும் பணியை மட்டுப்படுத்தி விடாது தயாக உணர்வாளனாகவும் எங்களது சமயத்தினையும் மொழியினையும் வளப்படுத்தும் நல்ல ஓர் கலைஞனாகவும் தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.
இன்று அவர் மீளாத்துயில் கொள்கின்ற நிலையிலும் அவர் எமது மக்களுக்காக ஆற்றிய சேவைகள் என்றும் நினைவில் கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
இவ் இறுதி அஞ்சலி நிகழ்வில் முன்னாள் கல்வி அதிகாரி நடராஜா அனந்தராஜ், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர்கள், அரச அதிகாரிகள், முன்னாள் போராளிகள், இசைத்துறை கலைஞர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் எனப் பலரும் இறுதி அஞ்சலியுரையமை குறிப்பிடத்தக்கது.