;
Athirady Tamil News

சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பு!!

0

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான இலக்குகளை விரைவாக அடையக்கூடிய, முன்னணி துறையாக சுற்றுலாத்துறை காணப்படுவதால், அதனை மேம்படுத்துவதற்கான பல முக்கிய தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதன் போது அரச மற்றும் தனியார் துறையின் பங்களிப்பை அதிகளவில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும், ஒத்துழைப்புக்களை வழங்கும் தரப்பினருக்கு அவசியமான வசதிகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் என்றும் உறுதியளித்தார்.

ஹில்டன் ஹோட்டல் குழுமத்தின் அதி சொகுசு ஹோட்டலான (Hilton Yala Resort) ஹோட்டலை நேற்று (19) பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யால தேசிய பூங்காவிற்கு நாளாந்தம் பெருந்தொகையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், அவர்களை இலக்கு வைத்து இப்பிரதேசத்தை பரந்தளவான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டத்தின் பலனாக சுற்றுலாத்துறையை, விரைவில் இந்நாட்டின் பிரதான வருமான வழிமுறைகளில் ஒன்றாக மாற்ற முடியும் எனத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“இன்று இந்த யால பிரதேசத்தில் உயர்தர சொகுசு ஹோட்டலை திறந்து வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதிக நுகர்வுத் திறன் கொண்ட சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதோடு, முன்னேற்றத்திற்கான வாய்ப்பும் உருவாகும். அதற்காக, மெல்வா மற்றும் ஹில்டன் குழுமத்திற்கு நன்றி.

யால பிரதேசத்தில் சிதுல்பவ்வ மற்றும் ஆகாச சைத்திய என்ற இரண்டு புராதன வழிபாட்டுத் தலங்கள் இருந்துள்ளன. அவை இங்கிருந்த செழுமையையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கின்றன.

சுற்றுலாத்துறையை ஊக்குவித்து அதை முன்னோக்கி கொண்டு செல்வதே எமது நோக்கமாகும். அதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது.

இந்த யால பிரதேசத்தை சுற்றுலா பிரதேசமாக அபிவிருத்தி செய்யும் போது ஒரு வலயமாக அபிவிருத்தி செய்ய வேண்டும். உடவலவ, குமன போன்ற பகுதிகள் ஒன்றோடொன்று தொடர்புபட்டதாகவே அமைந்துள்ளன. உடவலவ யானைகள் தடம், குமன வரையில் நீண்டுச் செல்கிறது.

மேலும், இப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். இந்த யால பிரதேசத்தின் அபிவிருத்திக்கான திட்டத்தை முன்வைக்குமாறு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சுற்றுலா அமைச்சர் மற்றும் அந்த இரண்டு அமைச்சுகளின் அதிகாரிகளிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு மேலதிகமாக, கல்ஓயா, மாதுருஓயா, சோமாவதிய, மின்னேரியா, வஸ்கமுவ போன்ற இடங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

சுற்றுலா பயணிகள் கொழும்பில் இருந்து படகில் ஏறி புத்தளம் வந்து ஓரிரு நாட்கள் வில்பத்துவில் தங்கிவிட்டு திரும்பும் வகையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் வனவிலங்கு பாதுகாப்பு பிரதேசங்களை கட்டமைக்கும் வசதிகளும் உள்ளன.

இந்தியா, நேபாளம் செல்லும் போது இதுபோன்ற இடங்களைப் பார்க்கலாம். அவற்றை கருத்தில் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும். மேலும், சுற்றுலா மூலம் பெறப்படும் வருமானத்தை நான்கு முதல் ஐந்து மடங்குகளாக அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

1981 இல் மாலைத்தீவுக்கான எனது சுற்றுப் பயணத்தின் போது, சுற்றுலாப் பயணிகளின் மூலம் அந்த நாட்டின் வருமானம் குறைவாகவே காணப்பட்டது. அக்காலத்தில் இலங்கைக்கு வருவதை விடவும் குறைந்த அளவான சுற்றுலாப் பயணிகளே அங்கு வருகை தந்தனர். இன்று நம் நாட்டிற்கு வருகைத்தரும் அளவிற்கு நிகராக, 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் மாலைத்தீவிற்கும் செல்கிறார்கள்.

நாம் ஒரு சுற்றுலாப் பயணியிடம் 200 அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் போது, மாலத்தீவுகளில் 700 டொலர்கள் வரையில் அறவிடப்படுகிறது. எனவே நாட்டின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கு இந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அறவீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், நாட்டைக் கடன் பொறியிலிருந்து மீட்டெடுப்பது மட்டுமன்றி வருமானத்தை ஈட்டுவதற்கான புதிய வழிகளைத் உருவாக்கும் பொறுப்பும் என்னைச் சார்ந்திருந்தது.

தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத் துறையில் வருமானம் ஈட்ட அதிக காலம் தேவைப்படும். ஆனால் சுற்றுலாத்துறையில் விரைவில் அந்த இலக்கை அடைய முடியும்.

அதனால் வருமானம் ஈட்டி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதேநேரம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும். இவ்வருட இறுதிக்குள் நாட்டில் உள்ள சுற்றுலா விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் அளவிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதுவே தற்போதும் நடத்துகொண்டிருக்கிறது. அடுத்த வருடத்தில் சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிவதற்கு மேலதிகமாக அதனால் கிடைக்கும் வருமானத்தையும் இரட்டிப்பாக்கிக்கொள்ள முடியும்.

இந்த வருடம் கண்டியில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா பெரஹெர மற்றும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் காரணமாக இந்நாட்டில் உள்ள சுற்றுலா விடுதிகள் செப்டெம்பர் மாதத்தில் நிரம்பி வழிகின்றன. உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் கிறிஸ்மஸ் காலத்தில் இலங்கைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் முக்கிய இசைக்கலைஞர்களில் ஒருவரான Andrey Mucher எதிர்வரும் ஜனவரி மாதம் இந்நாட்டிற்கு வருகை தரவுள்ளார் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், காலி இலக்கிய விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன. இதன் மூலம் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டிற்கு வரவழைத்து நாட்டுக்குத் தேவையான வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கின்றோம். மேலும், இதனை வருமான வழியாக பார்க்கும் அதேநேரம் வேலைவாய்ப்புக்கான களமாகமாகவும் மாற்ற வேண்டும். அதற்காக இளைஞர் யுவதிகளை அதிகளவில் பயிற்றுவிக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தங்கள் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் அதேநேரம் மேற்படிச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதும் அவசியமாகும்.

நாட்டின் சுற்றுலாத்துறையில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த பல புதிய முன்மொழிவுகள் கிடைத்துள்ளன. அந்த வகையில், தங்களது வீடுகளில் அறைகளில் இரண்டினை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கி, உயர் வகையில் உபசரிப்புக்களை வழங்கி அதனால் 100 டொலர்களை ஈட்டிக்கொள்ளும் இயலுமையை கொண்டிருந்தால் அந்தச் செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதற்கான உதவிகயை அரசாங்கம் வழங்கும்.

சுற்றுலாத் துறையின் இலக்குகளை அடைவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், குறுகிய கால வருமான வழிகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வளங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கின்ற நிலையில், அதற்கு அனைவரினதும் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்”. என தெரிவித்தார்.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ,

சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனால் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத்தர ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதியின் இந்திய சுற்றுப் பயணத்தின் பலனாக இந்தியாவிலிருந்தே அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். மூன்றாவது பெரிய எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் சீனாவிலிருந்து வருகை தருகின்றனர்.

அனைத்து விமான சேவை நிறுவனங்களும் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. கட்டார் ஏயார்வேஸ் நிறுவனம் இலங்கைக்கு நாளாந்தம் ஆறு விமான சேவைகளை முன்னெடுக்கிறது.

துருக்கி விமான சேவையும் இலங்கைக்கு விமான பயணங்களை மேற்கொள்வதோடு, சிங்கப்பூர் விமான சேவை வாரத்தில் ஏழு நாட்களும் நாட்டுக்கு விமானப் சேவையை முன்னெடுக்கிறது. இஸ்ரேல் அகீரே விமான சேவை ஒக்டோபர் 31 ஆம் திகதியிலிருந்து வாரத்திற்கு இரு முறை இலங்கைக்காள நேரடி விமான சேவயை முன்னெடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் பல விமான சேவைகளை அதிகரித்த எதிர்பார்த்துள்ளோம்.

இலங்கையிலிருந்து 80 விமான சேவைகள் வாராந்தம் இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று சுற்றுலாத்துறையில் எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றுபட்டமைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ஹில்டன் ஹோட்டல் குழுமம் நுவரெலியாவிலும் நீர்கொழும்பிலும் அதி சொகுசு ஹோட்டல்களை விரைவில் திறக்கவுள்ளது. அதனால் இந்நாட்டின் சுற்றுலாத்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்பு கிடைக்கும்.

பல வருடங்களாக சுற்றுலாத்துறை குறித்து இலங்கையில் மேற்படி புதிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஜனாதிபதி பல புதிய திட்டங்களை அறவித்துள்ளார். அதனூடாக தற்காத்தில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்ள முடியும்.

இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 31 சதவீதமானவர்கள் மீண்டும் மீண்டும் வருகை தருபவர்கள் என புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு இறுதி இலக்கான நாடாக அமைய வேண்டியதில்லை. ஆனால், உயர்ந்த நட்புறவும் விருந்தோம்பலும் கிடைக்கும் நாடாக இருக்க வேண்டும்.

இலங்கையில் தங்குவதற்கான விருப்பத்தினாலேயே முதலீட்டாளர்கள் பலரும் இங்கு முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். எனவே இலங்கையில் கிடைக்கும் உயர் விருந்தோம்பலை தொடர்ச்சியாக வழங்க வேண்டும்.

ஜனாதிபதியின் மேற்படி வேலைத்திட்டங்களின் பலனாக இந்நாட்டின் சுற்றுலா வியாபாரத்தில் வெற்றியை ஈட்டிக்கொள்ளும் அதேநேரம் முன்னணி வருமானம் ஈட்டும் துறையாக சுற்றுலாத்துறையை மாற்றியமைக்க முடியும் என்று சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.