;
Athirady Tamil News

மணிப்பூரில் ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு!!

0

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ந் தேதி, பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. 160 பேர் பலியானார்கள். மணிப்பூர் கலவர வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, 20 வழக்குகளை சி.பி.ஐ.யிடம் மணிப்பூர் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அந்த வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ. தொடங்கி உள்ளது. அவற்றில், ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கும் அடங்கும். மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் கடந்த ஜூன் 4-ந் தேதி இந்த கொடிய சம்பவம் நடந்தது.

டான்சிங் ஹங்சிங் என்ற 7 வயது சிறுவனின் தாயார் மீனா ஹங்சிங், மெய்தி இனத்தை சேர்ந்தவர். அவனுடைய தந்தை ஜோசுவா ஹங்சிங், குகி பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஒரு நிவாரண முகாமில் டான்சிங் ஹங்சிங் தங்கி இருந்தபோது, மெய்தி இன போராட்டக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், துப்பாக்கி குண்டு ஒரு இரும்பு தூணில் பட்டு தெறித்து, டான்சிங்கை காயப்படுத்தியது. அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

சிறுவனின் தாயாரும், உறவுக்கார பெண் லிடியாவும் மெய்தி இன கிறிஸ்தவர்கள் என்பதால், அவர்கள் சிறுவனுடன் ஆம்புலன்சில் செல்வது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் 2 ஆயிரம் பேர் கொண்ட கும்பல், ஆம்புலன்சை மடக்கியது. டிரைவரையும், நர்சையும் விரட்டியடித்தது. சிறுவனின் தாயாரும், உறவுக்கார பெண்ணும் தங்களை விட்டுவிடுமாறு எவ்வளவோ கெஞ்சியும் போராட்ட கும்பல் ேகட்கவில்லை. ஆம்புலன்சுக்கு தீவைத்தனர். இதில் சிறுவனுடன் 3 பேரும் உயிருடன் எரிந்து சாம்பலாகினர்.

போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கும்பலை கலைக்க முயன்றபோதிலும், பலன் கிட்டவில்லை. இச்சம்பவம் தொடர்பாக லம்பெல் போலீஸ் நிலையத்தில் போலீசார் பதிவு செய்த வழக்கும், கங்போக்பி போலீஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த மே 3-ந் தேதி, குகி பழங்குடியின தலைவர்களால், தான் கற்பழிக்கப்பட்டதாக ஒரு மெய்தி இன பெண் அளித்த புகாரும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளில் அடங்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.