அண்ணாமலை முதல் கட்ட நடைபயணம் நாளையுடன் முடிவடைகிறது- நெல்லையில், மத்திய மந்திரி பங்கேற்கிறார்!!
பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடைபயணத்தை கடந்த மாதம் 28-ந் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கினார். தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபயணம் சென்றார். அப்போது மத்திய பா.ஜனதா அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். நெல்லை மாவட்டத்தில் 4 நாட்கள் நடை பயணத்தை நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் தொடங்கிய அவர், நேற்று 2-வது நாளாக வள்ளியூர், களக்காடு பகுதிகளில் நடைபயணம் சென்றார். இன்று அவர் நடைபயணம் ஏதும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் அண்ணாமலையின் முதல் கட்ட நடைபயணம் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. நாளை மாலை நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேட்டை பாறையடி காலனி பகுதியில் அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்குகிறார். இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொள்கிறார். இந்த நடைபயணமானது வழுக்கோடை, தொண்டர் சன்னதி வழியாக நயினார் குளம் சாலையில் சென்று டவுன் ஆர்ச்சில் இருந்து சொக்கப்பனை முக்கு செல்கிறது.
அங்கிருந்து பாரதியார் தெரு வழியாக சென்று வாகையடி முனையில் நடைபயணம் முடிவடைகிறது. அங்கு வாகனத்தில் நின்றபடி அண்ணாமலை பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே உரையாற்றுகிறார். தொடர்ந்து முதல் கட்ட நடைபயணத்தை முடித்துக்கொண்டு அவர் சென்னை புறப்படுகிறார். இதனையொட்டி பா.ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர், பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2-வது கட்ட நடைபயணம் தென்காசி மாவட்டத்தில் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறார்.