லூனா – 25 விண்கலம் வெடித்தது ஏன்? நிலவில் சாதனையை படைக்குமா சந்திராயன் – 03 !!!
நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி ஆய்வுகளை மேற்கொண்டு சரித்திரங்கள் படைப்பதற்கு உலக வல்லரசு நாடுகள் முனைப்புடன் செயற்பட்டு வருகையில் அண்மையில் இந்தியா தனது முயற்சியின் பயனாக சந்திராயன் – 3 விண்கலத்தை விண்ணிற்கு ஏவியது.
இதற்கு போட்டியாக மறுமுனையில் லூனா-25 என்ற விண்கலத்தை ரஷ்யா சோயுஸ் ரொக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பி வைத்ததாலும் அதன் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
திறன்மிக்க உந்துவிசை இயந்திரம் பொருத்தப்பட்டிருந்ததால், பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதைகளை முழுமையாக கடந்து செல்லாமல், குறுக்கு வழியில் விரைவில் சென்று நிலவை 10 நாட்களில் லூனா- 25 விண்கலம் நெருங்கியது.
சந்திராயன் – 3 விண்கலத்திற்கு முன்னதாக, லூனா – 25 விண்கலத்தினை இன்று (21) நிலவின் தென்துருவ பகுதியில் தரையிறக்க ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ‘ராஸ்காஸ்மாஸ்’ இன் விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.
அதற்காக நிலவின் தென் துருவத்தின் முந்தைய சுற்றுவட்டப் பாதைக்குள் லூனா-25 விண்கலத்தை, தரையிறக்குவதற்காக நுழைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் (19) ஈடுபட்டனர்.
அந்த வேளையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, லூனா-25 விண்கலத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது.
விண்கலத்துடனான தொடர்புகளை மீளவும் கொண்டுவருவதற்காக கடந்த 2 நாட்களாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிய லூனா – 25 கட்டுப்பாட்டை இழந்து வெடித்ததாக இன்று (21) அதிகாலை 4 மணியளவில் ரோஸ்காஸ்மோஸ் அறிவித்தது.
நிலவில் தரையிறங்குவதற்காக விண்கலத்திற்கு வழங்கப்பட்ட உந்து விசை, தேவையைக் காட்டிலும் அதிகளவில் வழங்கப்பட்டதே லூனா – 25 விண்கலம் வெடிக்க காரணம் என்று, முதுநிலை விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார்.
நாசாவால் ஏவப்பட்ட பெரும்பாலான அப்பல்லோ பயணங்கள், மனிதர்களை ஏற்றிச் சென்ற விண்வெளிப் பயணங்கள் மற்றும் ரஷ்யா மேற்கொண்ட லூனா பயணங்கள் ஆகியவை நிலவின் மத்திய ரேகைக்கு (Equator) அருகில் மட்டுமே தரையிறங்கி இருந்தன. ஏனென்றால் அந்த இடத்தில் தரையிறங்குவது மிகவும் இலகு.
அந்த இடத்தில் நேரடியாக சூரிய ஒளி கிடைப்பதனால் தொழில்நுட்ப அதிர்வுகள் மற்றும் பிற உபகரணங்கள் செயற்படத் தேவையான ஒளியையும் விசையையும் பெறமுடிவதனால் இலகுவில் தரையிறங்கலாம்
இங்குள்ள வெளிச்சம் இரவு நேரத்திலும் தெளிவாகத் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சந்திரனின் சுழலும் அச்சு சூரியனுக்கு சரியான கோணத்தில் இருப்பதனால், துருவப் பகுதிகளில் சூரியக் கதிர்கள் பட்டாலும் அங்குள்ள பள்ளங்களின் ஆழத்திற்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை.
இதன் காரணமாக, சந்திரனின் துருவப் பகுதியில் உள்ள பள்ளங்கள் ஏறத்தாழ இரண்டு பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளி கிடைக்காமல் மிகவும் குளிரான நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இதனாலேயே நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதும், தொழில்நுட்ப பரிசோதனைகளை நடத்துவதும் மிகவும் கடினமான விடயமாக உள்ளது.
இதனாலேயே நிலவின் தென் துருவத்தை சென்றடையவும் அங்கு ஆய்வுகளை நிகழ்த்தவும் உலக வல்லரசுகள் போட்டியிட்டுக்கொண்டு இருக்கின்றன.
லூனா-25 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியிருந்தால், அங்கே தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையை ரஷ்யா தனதாக்கியிருக்கும்.
இப்போது அந்தச் சரித்திர வெற்றிப்பாதையை நோக்கி சந்திராயன் – 3 விண்கலம் பயணித்துக்கொண்டுள்ளது.
லூனா – 25 விண்கலத்தின் ஆய்வு நோக்கங்களாக,
1.நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளியே படாத ஆழமான பள்ளங்களில் தண்ணீர் உறைந்த நிலையில் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்வது.
2. நிலவின் தென் துருவத்தில் மதிப்பு வாய்ந்த கனிமங்கள் இருக்கின்றதா என்பதை அறிந்து கொள்ளுதல்
போன்ற நோக்கங்களை கொண்ட லூனா – 25 இன் பயணம் முற்றுப்பெற்றுள்ள நிலையில், சந்திராயன் – 3 விண்கலம் மீதான ஆர்வம் இப்போது அனைவர் மத்தியிலும் பரவலாக இருந்து வருகிறது.
அதற்கு ஏற்றாற்போல் நிலவின்தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற முத்திரையைப் பதிக்க இஸ்ரோ கடும் முயற்சிகளை செய்து வருகிறது.
சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து சென்ற விக்ரம் லேண்டர் தற்போது நிலவிலிருந்து குறைந்தபட்சம் 25 கி.மீ., அதிகபட்சம் 134 கி.மீ. என்ற தொலைவில் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரத்தையும் தற்போது இஸ்ரோ மாற்றியுள்ளது.
ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.45 மணிக்குப் பதிலாக சற்று தாமதமாக மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தால் அதிலிருந்து ஒட்சிசனை உருவாக்கி அங்கு மனிதன் வாழக்கூடிய சூழலை உருவாக்க முடியும் என்பதை ஆராய்வதே சந்திராயன் – 03 விண்கலம் ஏவப்பட்டதன் நோக்கம் என்று இஸ்ரோ கூறியுள்ளது.
நிலவின் தென் துருவத்தை சந்திராயன் – 03 அடையுமா? தனக்கான வரலாற்று முத்திரையை இந்தியா தனதாக்கிக்கொள்ளுமா? என்ற எதிர்பார்ப்புடன் இஸ்ரோ மட்டுமன்றி இன்று உலக நாடுகளும் அதன் வரிசையில் ஒன்று கூடியிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.