;
Athirady Tamil News

ஆபரேஷன் குக்கூன்: வீரப்பனை உயிரோடு பிடிக்காதது ஏன்? !!

0

அக்டோபர் 18, 2004 – தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் ஒன்று, எதிரே வந்த கரும்பு லாரியால் வேகத்தை குறைத்து நின்றது. சந்தேகத்தில் ஆம்புலன்சில் இருந்து வெளியே பார்த்த சந்தனமரக்கடத்தல் வீரப்பன், கரும்பு லாரியால் ஆம்புலன்ஸ் நின்றதாக நம்பினார்.

ஆனால், அடுத்த நில நொடிகளிலேயே அந்த நம்பிக்கை தகர்ந்தது. நாலாப்புறமும் இருந்து துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க அவர் பயணித்த ஆம்புலன்ஸே சல்லடைப்போல் ஆனது.

இந்த ஆபரேஷனுக்கு குக்கூன்(Cocoon) என பெயரிட்டிருந்தார்கள் விஜயகுமார் ஐபிஎஸ் தலைமையிலான தமிழ்நாடு அதிரடிப்படை அதிகாரிகள். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போலீஸ் பிடியில் சிக்காத வீரப்பனை சுட்டுக்கொன்று சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் இறப்பு குறித்த சந்தேகங்களும் மர்மங்களும் இன்றளவும் நீங்காமல் உள்ளது.

இந்த குக்கூன் ஆபரேஷனுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான செந்தாமரைக்கண்ணன் ஐபிஎஸ், இறுதியாக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றி கடந்த வருடம் ஜுன் மாதம் ஓய்வு பெற்றார்.

காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றிய செந்தாமரைக்கண்ணன், கடந்த வருடம் ஜுன் மாதம் ஓய்வு பெற்றார்.

ஆபரேஷன் குக்கூன் குறித்து பிபிசியிடம் விரிவாக பேசிய செந்தாமரைக்கண்ணன், கடந்த காலங்களில் நடந்த ஆபரேஷனின் தொடர்ச்சிதான் குக்கூன் என்றார்.

“ஆபரேஷன் குக்கூனுக்கு முன் ஒரு ஆபரேஷன் நடத்தினோம். அதில், நான்கு பேர் தீவிரவாதிகளைப் போல வேண்டும் என வீரப்பன் கேட்டதால், நான்கு பேரை எங்கள் சார்பாக அனுப்பிவிட்டிருந்தோம். அவர்கள் 20 நாட்கள் வீரப்பனுடன் தங்கியிருந்தார்கள். அதுதான், அதிரடிப்படையின் நுண்ணறிவுப் பிரிவுக்கு கிடைத்த முதல் வெற்றி,” என்றார்.

இந்த ஆபரேஷன் தான், ஆபரேஷன் குக்கூனுக்கு அடித்தளம் எனக்கூறும் செந்தாமரைக்கண்ணன், அந்த 20 நாட்களில் வீரப்பனைப் பற்றி முழுமையான தகவல் கிடைத்ததாகக் கூறுகிறார்.

“அவரது தொடர்புகள் யார், எப்படி காட்டிற்குள் போகிறார்கள், என்ன யோசிக்கிறார்கள், அவரை யார் சந்திக்கிறார்கள், யார் அவருக்கு ஆயுதம் கொடுக்கிறார்கள், என்பதெல்லாம் அந்த ஆபரேஷனில் தான் தெரிந்தது. அந்த ஆப்பரேஷனில் நிறைய ஆபத்து இருந்தது, தெரிந்து தான் அனுப்பினோம். ஆனால், அதில் நிறைய தகவல்கள் கிடைத்தன,” என்றார்.

அந்த 20 நாட்களில் வீரப்பனை அடிக்கடி சந்திப்பவர்கள், துப்பாக்கி சப்ளை செய்யும் சப்ளையர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரின் தகவல்களைப் பெற்று, அவர்களைப் பயன்படுத்தி வீரப்பனை காட்டிற்குள் இருந்து வெளியே கொண்டு வர முடிவு செய்தது தமிழ் நாடு அதிரடிப்படை.

“அந்த 20 நாட்களில் கிடைத்த தகவல்களில் இரண்டு தகவல்கள் முக்கியமானது. ஒன்று, அவருக்கு கண் தெரிவதில்லை, அதனால், அதனை சரி செய்ய வேண்டும். காட்டிற்குள் மருத்துவர்களை அழைத்து வர முடியாது. அதனால், வெளியே வந்து கண் பார்வையை சரி செய்ய வேண்டும் என்பது முதல் ஆசை.

இரண்டாவது, சில தமிழ் தீவிரவாதிகள் அவருடன் இரண்டு வருடங்கள் இருந்தார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக, தமிழ் மீதான பற்றும், தனித் தமிழ்நாடு மேலான ஈடுபாடும் அவருக்கு இருந்தது. அதனால், ஈழத்தை பார்க்க வேண்டும். தலைவர் பிரபாகரனை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது,” என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

ஈழத்தில் இருந்து ஆயுதங்களை கொண்டு வந்து தனி தமிழ்நாடே அமைத்துவிடலாம், தமிழ் தலைவராக மாறலாம் என வீரப்பன் ஆசைப்பட்டதாகக் கூறுகிறார் செந்தாமரைக்கண்ணன்.

“இந்த மாதிரியான தவறாக கொள்கைகளை அவர்கள் வீரப்பனுக்கு புகுத்தியிருந்தார்கள். அதுதான் திசை திருப்புதல். அதனை எங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு, எங்கள் பக்கம் இருந்த சப்ளையர்களுக்கு சலுகைகள் கொடுத்து, அவர்களை மாற்றி, எங்கள் சார்பாக பேச வைத்து, அவருடைய எண்ணத்தை அவர்கள் நிறைவேற்றுவார்கள், உதவி செய்ய வழி முறை இருக்கென்று நம்ம வைத்து, அவரை காட்டில் இருந்து வெளியே கொண்டு வருவது தான் திட்டம்,” என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

இலங்கையை சேர்ந்தவராக செந்தாமரைக்கண்ணன்தான் வீரப்பனுடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார்

ஆனால், வீரப்பனை நம்ப வைக்க அதிரடிப்படையினர் போட்டிருந்த திட்டம் 100% வெற்றி பெறும் என யாருக்கும் நம்பிக்கை இல்லை என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

அதிரடிப்படையினர் பக்கம் இருந்த சப்ளையர்கள் மற்றும் வியாபாரிகள் மூலமாக இலங்கையை சேர்ந்தவராக செந்தாமரைக்கண்ணன்தான் வீரப்பனுடன் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.

“சப்ளையர்கள் மூலமாக பேசிக்கொண்டிருந்தாலும், அவர் கேட்கும் கேள்விகளுக்கு அதிகமாக நான் பதில் அனுப்பவில்லை. அதிகம் பேசினால், அதிகம் கேள்விகள் வரும் சந்தேகங்கள் வரும். அதனால், அதனை தவிர்த்தேன். நானும் இலங்கையில் உள்ள போராளியைப் போல அளவாக ஒரு தலைவரைப் போலத்தான் பேசினேன். அதனால், அவருக்கு அதிக சந்தேகம் வரவில்லை,” என்கிறார்.

வீரப்பன் ஆயுதங்கள் எடுத்து வரலாமா ?, உடைகள் எடுத்து வரலாமா ? வேறு என்னவெல்லாம் தேவை என்று கேட்டதாக பகிர்ந்தார் செந்தாமரைக்கண்ணன்.

“எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் எதுவும் நிபந்தனைகளோ கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. அவர் ஆயுதங்கள் எடுத்து வரலாமா என்று கேட்டார். இங்கேயே நிறைய இருக்கு, வேண்டும் என்றால் ஆளுக்கு ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள். நிறைய எடுத்து வர வேண்டாம் என்றோம்.

மீசை, தலை முடியை சரி செய்ய வேண்டுமா எனக் கேட்டு அனுப்பினார். மீசை இருந்தால் அடையாளம் தெரியும், எடுத்தால் அடையாளம் தெரியாது, எளிமையாக செல்லலாம் என்றேன். அவர் அதை எடுத்துவிட்டார்,” என்றார்.

அவருக்கு தேவையான ஆயுதங்களையும் சிலவற்றை தயார் செய்து அனுப்பியதாகவும் கூறினார் செந்தாமரைக்கண்ணன்.

“உரையாடல் மட்டும் நம்பிக்கை கொண்டு வரவில்லை. சந்தேகமின்றி அவருக்கு தேவையாவற்றையும் செய்து கொடுத்தோம். அதற்கு பிறகுதான் நம்பினார்,” என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆம்புலன்சில், வீரப்பன் எந்த பக்கம் அமர்ந்திருக்கிறார், அவருடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க ஆம்புலன்சினுள் கேமரா பொருத்தியிருந்துள்ளனர்

வீரப்பனிடம் முன்னதாகவே கூறியிருந்தபடி, தர்மபுரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை பாடி வனத்தையொட்டியிருந்த தண்ணீர் தொட்டியின் அருகே அதிரடிப்படையினர் சார்பாக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது.

“அந்த ஆம்புலன்சில் என்னுடைய ஓட்டுநர் சரவணனும், உதவி ஆய்வாளர் வெள்ளத்துரையும் இலங்கைக்கு அழைத்துச் செல்லும் நபர்களாக சென்றிருந்தார்கள். சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரையும் வீரப்பனி பிடித்து வைத்துக்கொண்டால், என்ன செய்வது என்று அவர்களின் பாதுகாப்புக்காக கைத்துப்பாகிகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதேபோல, அவர்களிடம் எரி குண்டுகளும் கொடுக்கப்பட்டிருந்தது,” என விவரிக்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

பாடி பகுதியில் இருந்து தர்மபுரிக்கு மூன்று சாலை வழியாக செல்லலாம் என்பதால், மூன்று சாலைகளிலும் தங்களது குழுவினர் தயாராக இருந்ததாகக் கூறுகிறார்.

“நாம் திட்டமிட்ட பாதையில்தான் அவர் வர வேண்டும் என்பது இல்லை. அவர் திடீரென சந்தேகத்தில், வழியை மாற்றச் சொன்றால், அதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஆனால், நல் வாய்ப்பாக அவர் நாங்கள் திட்டமிட்ட சாலையில் தான் பயணித்தார்.

அதனை கண்காணித்து தெரிவிப்பதற்காகவே எங்கள் அதிரடிப்படையை சேர்ந்த குமரேசன் என்பவர் அந்த சாலையில் இரண்டு மாதங்களாக ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தார். அவர் ஆம்புலன்ஸ் வரும் வழியை கண்காணித்து நாங்கள் இருக்கும் சாலையில் தான் ஆம்புலன்ஸ் வருகிறது என்பதை உறுதி செய்து தகவல் கொடுத்தார்,” என்றார்.

பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆம்புலன்சில், வீரப்பன் எந்த பக்கம் அமர்ந்திருக்கிறார், அவருடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை கண்காணிக்க ஆம்புலன்சினுள் கேமரா பொருத்தியிருந்துள்ளனர்.

அவர் எந்தப் பக்கம் அமர்ந்திருந்தார் என்ற தகவல்தான் அவரை சரியாக சுடுவதற்கு உதவியாக இருந்ததாகக் கூறும் செந்தாமரைக்கண்ணன், ஆபரேஷன் குக்கூன் நடத்த திட்டமிட்டிருந்த இடத்தை ஆம்புலன்ஸ் வந்ததும், நான்கு புறங்களிலும் அதிரடிப்படையினர் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.

“நாங்கள் குறித்து வைத்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தபோது, ஆம்புலன்ஸுக்கு முன் எங்கள் சார்பாக நிற்க வைத்திருந்த கரும்பு லாரி இருந்தது, பின் புறம் அதிரடிப்படையை சேர்ந்த திருநாவுக்கரசு ஒரு வாகனத்தில் பின்தொடர்ந்து வந்தார். வலது புறம் உள்ள ஒரு பள்ளியின் சுற்றுச்சுவருக்கு பின்னால் ஆயுதம் ஏந்திய அதிரடிப்படையினரும், இடது புறத்தில் பழைய பஞ்சரான ஒரு லாரியில் ஆயுதம் ஏந்திய அதிரடிப்படையினரும் இருந்தோம்.” என விவரிக்கிறார் செந்தாமரைக்ககண்ணன்.

வீரப்பனை அருகில் இருந்து சுட்டுக்கொன்றதாக எழுப்பப்படும் கேள்வி உண்மைதான் என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

ஆம்புலன்ஸ் நின்றதும், அதில் இருந்து ஓட்டுநர் சரவணனும், உதவி ஆய்வாளர் வெள்ளத்துரையும் இறங்கி ஓட, நடப்பது புரியாமல் இருந்துள்ளார் வீரப்பன்.

“வண்டி நின்றதும் வீரப்பன் வாகனத்தின் வெளியே பார்க்கிறார். முன்னால் கரும்பு லாரி இருந்ததால், அவர் சந்தேகிக்கவில்லை. பின், ஒட்டுநரும், உதவி ஆய்வாளரும் இறங்கி ஓடும்போது, வெள்ளத்துரையிடம் வாகனத்திற்குள் வீசுவதற்காக கொடுத்திருந்த எரி குண்டை அவர், பதற்றத்தில் வாகனத்திற்கு கீழ் போட்டுவிட்டார். அதற்கு பிறகு ஆம்புலன்சின் பின் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விளக்குகள் எரியும்போதுதான், வீரப்பனுக்கு தான் போலீஸ் பிடியில் சிக்கியதையே உணர்கிறார்,” என்றார்.

வீரப்பனை அருகில் இருந்து சுட்டுக்கொன்றதாக எழுப்பப்படும் கேள்வி உண்மைதான் என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

“வீரப்பன் எந்த திசையில் இருந்தார் என்பது எங்களுக்கு முன்னதாகவே தெரியும். ஆம்புலன்ஸ் சரியாக அந்த பஞ்சரான லாரிக்கு மிக அருகில் நின்றது. அந்தப் பக்கம்தான் வீரப்பனும் அமர்ந்திருந்தார். லாரிக்கும் ஆம்புலன்சுக்கும் இடையில் 10 அடி தூரம் கூட இருக்காது. அந்தப் பக்கம்தான் இருக்கிறார் ‘ஹூட்’ என நாங்கள் உத்தரவு கொடுத்ததும், அவரை சுட்டனர். அது நேரடியாக அவர் தலையில் பட்டது. பட்டதும், அவர் முன்னால் சாய்துவிடுகிறார்,” என விளக்கினார் செந்தாமரைக்கண்ணன்.

இந்த ஆப்பரேஷனில் வீரப்பன் பதிலுக்கு துப்பாக்கி எடுத்து வெளியே சுட முயற்சிக்கவில்லை என்கிறார் செந்தாமரைக்கணணன்.

“அவர் ஒரு முறைக் கூட துப்பாக்கியால் சுடவில்லை. தலையில் காயம்பட்டதும் அவர் முன்னால் சாய்கிறார். அவர் மீது காயம்படக் கூடாது என அவருடன் இருந்த சேத்துக்குளி கோவிந்தன் அவரை மறைத்துக் கொண்டதால், கோவிந்தனுக்குத்தான் அதிக காயம்,” என்றார்.

அதிரடிப்படையினரின் இந்த ஆபரேஷனில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கெளடா, சேதுமணி ஆகிய நால்வரும் கொல்லப்பட்டனர்.

ஆப்பரேஷனில் நிச்சயம் நிரப்பப்படாத வெற்றிடங்கள் இருக்கும் என்கிறார் செந்தாமரைக்கண்ணன்.

பிபிசிக்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், இந்த ஆபரேஷனில் நிச்சயம் நிரப்பப்படாத வெற்றிடங்கள் இருக்கும் என்கிறார்.

“ஆம். இந்த ஆப்பரேஷனில் நிச்சயம் நிரப்பப்படாத வெற்றிடங்கள் இருக்கும். அது ஏன் என்றால், இது ஆவணப்படுத்தப்பட்ட ஆபரேஷன் இல்லை. அப்படி ஆவணப்படுத்தவும் முடியாது. இதில், ஏகப்பட்ட பொது மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

சொல்ல முடியாத விஷயங்களை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஊடகங்களும் விமர்சகர்களும் இதில் கேள்வி எழுப்புகின்றனர். அதற்காக, நான் காட்டிக்கொடுக்க முடியாது. ஆபரேஷன் நடந்தது உண்மைதான். அதை வெளியில் சொல்லாமல் இருப்பது என்னுடைய தொழில் தர்மம்,” என்றார்.

குக்கூன் நுண்ணறிவு ஆபரேஷனில்(Intelligence Operation) அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு இருந்திருக்காது என்றும் அவர் கூறுகிறார்.

“இது ஒரு புலனாய்வு ஆபரேஷனாக(Investigation Operation) இருந்தால், அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு, வெளிப்படையாக இருக்கும். ஆனால், இது ஒரு நுண்ணறிவு ஆபரேஷன் (Intelligence Operation). இதில் அனைத்துமே இந்திய தண்டணைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்டவையை பின்பற்றி செயல்படுத்த முடியாது,”என்கிறார் அவர்.

வீரப்பனைவிட அவருடன் இருந்த சந்திரே கெளடா சற்றும் இரக்கமற்றவர் என்றார் செந்தாமரைக்கண்ணன்.

அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றிவளைத்த பின்னர், எந்தச் சூழலிலும் வீரப்பனை உயிருடன் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையா என பிபிசி சார்பில் அவருடனான நேர்காணலில் கேட்டபோது, “அனைத்துப் பகுதிகளில் இருந்தும் சுற்றிவளைத்தது உண்மைதான். ஆனால், அவரை பல முறை கிட்ட நெருங்கிப்போகியும், நாங்கள் தவறவிட்டிருக்கிறோம். அதனால், இந்த முறை சுடுவதை தவிர வேறு வாய்ப்பு இல்லை. எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காது,” என்றார்.

மேலும் கூறுகையில், “ஒருவேளை வீரப்பனை நாங்கள் உயிருடன் பிடித்துவிட்டு, வேறு யாரையாவது நாங்கள் தப்பவிட்டால், அது வீரப்பன் பார்ட் – 2 ஆகிவிடும். வீரப்பனைவிட அவருடன் இருந்த சந்திரே கெளடா சற்றும் இரக்கமற்றவர். அவரை தப்பவிட்டிருந்தோம் என்றால், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். அதனால், எங்களிடம் இருந்த ஒரே வாய்ப்பு அதுதான்,” என்றார்.

தன்னை போலீஸ் பிடித்தால் கொன்றுவிடும் என்றும் அவர் தீர்க்கமாக நம்பியதாகக் கூறுகிறார் செந்தாமரைக்கண்ணன்.

வீரப்பனை சுடுவதை தவிர வேறு வழியில்லை எனக்கூறிய செந்தாமரைக்கண்ணன், அவரை சுட்டதற்கு வருந்துவதாகவும் தெரிவிக்கிறார்.

“நிச்சயமாக அவரை சுட்டதற்கு இன்றும் வருந்துகிறேன். அவர் சுடப்படவேண்டியவர் இல்லை. அவர் மிகவும் திறமைசாலி. அவரை வனப் பாதுகாப்பு அதிகாரியாகக் கூட நியமித்திருக்கலாம். வனத்தை பற்றி அந்தளவுக்கு அவருக்கு தெரியும். அவர் ஆரம்ப காலத்தில் பெரிய குற்றங்களில் ஈடுபடவி்ல்லை.

அவர் செய்தது அனைத்தும் வனக்குற்றங்கள்தான். ஆனால், அவரை தேடத்துவங்கிய பின்னர், அது அவருக்கும் போலீசாருக்கும் இடையிலான சண்டையாக மாறியது. அவர் சிறிய சிறிய குற்றங்கள் செய்து கொண்டிருந்தவர், ஒரு கட்டத்திற்கு மேல் அதிலிருந்து மீள முடியாதவராகிவிட்டார்.

தன்னை போலீஸ் பிடித்தால் கொன்றுவிடும் என்றும் அவர் தீர்க்கமாக நம்பினார். அவரும் இறுதிக்காலங்களில் பொது மன்னிப்பு பெற எவ்வளவோ போராடினார். ஆனால், எதுவும் கைக்கூடவில்லை,” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.