வியட்நாம் போர்: அமெரிக்கா வெளியேறியதை அறியாமல் 17 ஆண்டு காத்திருந்த ஃபுல்ரோ போராளிகள்!!
75 வயதான பாஸ்டர் ஒய் ஹின் நீ, அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள தனது தேவாலயத்தில் வசதியாக இருந்து நற்செய்தியை பிரசங்கித்தார். ஆனால் ஒரு இளைஞனாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக காட்டில் உயிர் வாழ்ந்துவந்தார். போர் முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகு வியட்நாமிய ராணுவத்துடன் போரிடும் தோழர்களுக்கு பிரசங்கம் செய்தார் – அவருடைய ஏகே 47 துப்பாக்கி எப்போதும் அவருடனேயே இருந்தது.
காட்டுக்குள் ஓடிப்போய், உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில், ஹின் நீயும் அவரது கிளர்ச்சியாளர்களின் பிரிவும் உணவுக்காக காட்டுக்குள் அலைந்தனர். கெமர் ரூஜுக்கு பணம் கொடுப்பதற்காக புலிகளை வேட்டையாடி அவற்றின் தோல்களை விற்றனர். ஹின் நீ அவர்களின் சுதந்திரத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்திய 1992ம் ஆண்டு வரை “மறக்கப்பட்ட இராணுவம்” ஆயுதங்களை கீழே போடவில்லை.
வியட்நாமில் வடக்குப் பகுதிக்காகப் போராடிய வியட்காங்(Vietcong), டெட் – அல்லது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீது சரமாரியாக ராக்கெட்டுகளை வீசியபோது, 1968 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இரவு முதன்முறையாக ஒய் ஹின் நீ கிட்டத்தட்ட உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
வியட்நாமில் வளர்ந்த ஹின் நீ, அந்நாட்டின் மத்திய ஹைலேண்ட்ஸின் மிகப்பெரிய நகரமான புவான் மா துவோட்டில் அமெரிக்க கிறிஸ்தவ மிஷனரிகளுடன் வசித்து வந்தார். அவரது பெற்றோர்கள் ஏழைகளாக இருந்த நிலையில், அவர் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக அவருக்கு எட்டு வயதாக இருந்தபோது மிஷனரிகளிடம் அவரை விட்டுச் சென்றார்கள் என்று அவர் கூறுகிறார்.
ராக்கெட்டுகள் தாக்கியபோது அவரது வளர்ப்புத் தாய் கரோலின் கிறிஸ்வால்ட் தூங்கிக் கொண்டிருந்தார். மிஷனரிகளின் தனித்தனி அறிவிப்புகள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், கம்யூனிஸ்ட் துருப்புகள் அந்த வீட்டிற்குள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததாகத் தெரியவருகிறது.
அப்போது கரோலினின் தந்தை லியோன் உடனடியாக உயிரிழந்தார். அன்று இரவு ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்த ஹின் நீ – வீட்டிற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் இருந்து கரோலினை தோண்டி எடுத்து மீட்ட போதிலும் அவரும் விரைவில் இறந்துவிட்டார்.
“என் அம்மா பெரும் துன்பம் மற்றும் துயரத்துடன் உயிரிழந்தார்,” என்று அவர் கூறுகிறார். “ஆனால் கடவுள் என் உயிரைக் காப்பாற்றினார்.”
ஹின் நீ ஒரு பதுங்கு குழியில் மறைந்திருந்த போது பல மிஷனரிகள் கொல்லப்பட்டு, அவர்களது உடைமைகள் கைப்பற்றப்பட்டன. பலர் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டனர்.
அவரது இழப்புகளைக் கடந்து, அவர் தானாகவே ஒரு பைபிள் பள்ளியில் சேர்ந்து, தேவாலயத்தில் வேலை செய்தார்.
பின்னர் மார்ச் 1975 வரை அவர் ஒரு தீர்க்கமான போர் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. அப்போது தெற்கில் செயல்பட்ட அமெரிக்க வீரர்கள் அழிக்கப்பட்டு, புவான் மா துவோட்டில் இருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
குண்டுகள் பொழிந்ததால், ஹின் நீயும் 32 பைபிள் பள்ளி மாணவர்களும் பல மைல் தூரம் நடந்து தப்பினர்.
அப்போது தான் மொன்டக்நார்ட்ஸ் எனப்படும் இன சிறுபான்மையினpரன் சுயாட்சிக்காகப் போராடிய கிளர்ச்சி இயக்கமான ஐக்கிய முன்னணியின் (Fulro) போராளிகள் ஹின் நீயை அணுகினர். இந்த மலையக மக்கள் தங்கள் கிறிஸ்தவ நம்பிக்கை உள்ளிட்ட காரணங்களுக்காக வியட்நாமில் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க மிஷனரிகளுடன் ஹின் நீயின் நெருங்கிய தொடர்புகள் மற்றும் அவரது ஓரளவுக்கான ஆங்கில அறிவு ஆகியவை அவர்களை மீண்டும் அமெரிக்க ராணுவத்துடன் இணைக்க உதவும் என்று அவர்கள் நம்பினர். அவர்கள் 1973 இல் போரில் இருந்து விலகுவதற்கு முன் பல்லாயிரக்கணக்கான மலையகப் போராளிகளை முன்னணிப் போராளிகளாக சேர்த்தனர்.
வியட்நாம் போரின் போது அமெரிக்க சிறப்புப் படைகள் மான்டாக்னார்ட் அமைப்பினரை பெரும் எண்ணிக்கையில் சேர்த்துக்கொண்டன.
ஹின் நீ, தன்னைப் போன்ற இறை நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாக இருந்த போராளிகளுடன் சேர ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். “எனக்கு வேறு வழியில்லை. அது என் இதயத்தைத் தொட்டது.”
மார்ச் 10, 1975 அன்று, அவர் அவர்களுடன் காட்டுக்குள் தப்பி ஓடினார்.
முதல் நான்கு ஆண்டுகள், அவர்கள் வியட்நாம் எல்லைக்குள் தங்கியிருந்தனர். ராணுவத்தின் பார்வையில் இருந்து தப்ப, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தனர்.
“துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே ஓடும் நிலையே அப்போது நிலவியது. எங்களிடம் வலுவான ஆயுதங்கள் இல்லை,” என்று ஹின் நீ கூறுகிறார். இருப்பினும் அவர் நேரடியாகப் போரில் ஈடுபடவில்லை. ஆனால் தற்காப்புக்காகவும், வேட்டையாடுவதற்காகவும் எப்போதும் ஒரு ஏகே-47 துப்பாக்கியை உடன் வைத்திருந்தார்.
1979 வாக்கில், வியட்நாம் ராணுவ வீரர்கள் ஃபுல்ரோவைத் தேடி தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். எனவே இந்தக்குழு வியட்நாமின் மேற்கு திசையை நோக்கி கம்போடியாவிற்கு தப்பிச் சென்றது.
“எங்களால் தங்க முடியவில்லை. எனவே நாங்கள் எல்லையைத் தாண்டிவிட்டோம் – அது மிகவும் ஆபத்தானது,” என்று அவர் கூறுகிறார்.
ஆனால் வியட்நாமை விட்டு வெளியேறுவது புதிய ஆபத்துகளை கொண்டு வந்தது. போல்பாட்டின் இனப்படுகொலையாளர் கெமர் ரூஜின் கொரில்லாப் படையினர் கம்போடியாவின் கிழக்கு எல்லையில் பல இடங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
கம்போடியாவில் நான்கு ஆண்டுகால பயங்கரவாதத்தின் போது 17 லட்சம் பேரின் இறப்புகளுக்கு பொறுப்பானவர்கள் – வியட்நாம் ஆதரவு படைகளால் தூக்கியெறியப்பட்ட பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அந்தக் காட்டுப்பகுதியில் ஃபுல்ரோ கிளர்ச்சியாளர்கள் தங்குவதற்கு கெமர் ரூஜின் அனுமதி தேவைப்பட்டது. அதனால் ஹின் நீ மோண்டுல்கிரி மாகாணத்தின் காடுகளில் அவர்களின் உள்ளூர் தளபதிகளை சந்தித்தார்.
“நம் இருவருக்கும் ஒரே எதிரி’ என்று சொன்னேன் – அந்த ஒரு விஷயத்தில் மட்டுமே நாங்கள் இருதரப்பும் ஒத்த கருத்துகளைக் கொண்டிருந்தோம். கம்யூனிஸ்டுகள் வியட்நாமில் இருந்து இந்தப் பக்கம் வந்தால், நாம் அவர்களிடம் இதைச் சொல்லலாம்,” என்று அவர் கூறுகிறார்.
கெமர் ரூஜ், ஹின் நீயையும் அவரது பட்டாலியனையும் அந்தக் காட்டுக்குள் தங்க அனுமதித்தார். ஆனால் அதற்காக அவர்கள் அதிக அளவு புலி மற்றும் மலைப்பாம்பு தோல் மற்றும் மான் கொம்புகளைக் கொடுக்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டனர்.
இதையடுத்து, ஹின் நீயின் பிரிவில் இருந்த கிளர்ச்சியாளர்கள் புலிகளை பொறி வைத்துப் பிடித்ததாக அவர் கூறுகிறார். புலிகளின் மீதான அவர்களின் பயம் உண்மையானது – அவருடைய முகாமில் இருந்த மூன்று பேரை புலிகள் கொன்றுவிட்டன. ஆனால், கெமர் ரூஜ் குறித்த பயம் இன்னும் அதிகமாக இருந்தது.
“அவர்கள் மிகவும் கோபமாக இருந்தனர். அவர்கள் நாங்கள் கொடுத்த எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்தனர்,” என்று அவர் நினைவு கூர்ந்தார். “வரியாக இந்தப் பொருட்களைக் கொடுக்காவிட்டால், அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டும், என்று பலமுறை எங்களை மிரட்டினர்.”
ஃபுல்ரோ இன்னும் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதுடன், வியட்நாமியப் படைகளுடன் அவ்வப்போது சண்டைகளையும் நடத்தியது. அந்தப் படைப்பிரிவு ஒரு காட்டில் இருந்து மற்றொரு காட்டிற்கு மாறிக்கொண்டே இருந்தது. ஒரு மாதத்திற்கு மேல் எங்கும் நிலையாகத் தங்கியிருக்கமுடியவில்லை.
ஹின் நீ இப்போது ஒரு “காட்டு வாழ்க்கை” நினைவுக்கு வருகிறார் – ஃபுல்ரோ போராளிகள் விலங்குகளைப் போல சுற்றித் திரிந்தனர். மரங்களிலிருந்து இலைகள் உட்பட எதைக் கண்டாலும் சாப்பிட்டார்கள் என்று அவர் கூறுகிறார்.
“நாங்கள் நடந்தோம், நடந்தோம், நடந்தோம்… நடந்துகொண்டே இருந்தோம். யானைகளைப் பார்த்தால் நாங்கள் சுடுவோம். நாங்கள் பார்க்கும் எதையும் சுடுவதைத் தவிர வேறு வழியில்லை.”
இந்த காலகட்டத்தில் தான் அவர் குழுவில் இருந்த எச் பியூ என்ற பெண்ணை அவர் மணந்தார். காட்டில் அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஒரு குழந்தை இறந்துவிட்டது.
கம்போடிய காட்டுக்குள் போதகர் ஹின் நீ தொடர்ந்து பிரசங்கம் நடத்திவந்தார்.
காட்டுக்குள் இருந்த முகாமில் மதம் ஒரு முக்கியப் பங்கை வகித்தது.
அவர்கள் ஒரு புதிய இடத்திற்கு வந்ததும் ஹின் நீ செய்யும் முதல் காரியம் ஒரு சிலுவையை நிறுவதுதான். பின்னர் அவர் வீரர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மதச் சொற்பொழிவுகளை நடத்துவார்.
கிறிஸ்துமஸ் ஒருபோதும் தவறவிடப்படவில்லை. ஒரு கொண்டாட்டம் மட்டும் அவருக்கு தனித்து நின்று எப்போதும் நினைவில் இருக்கிறது.
1982 ஆம் ஆண்டில், அவர்கள் ஒரு இரவில் கரோல்களைப் பாடிக்கொண்டிருந்தார்கள்/ சில உள்ளூர் கெமர் ரூஜ் படையினர் தூரத்திலிருந்து அதைக்கேட்டுவிட்டு அங்கே வந்தனர்.
“பாடல்கள் மிகவும் இனிமையாக இருந்ததால், எங்களுடன் சேர முடியுமா என்று ஒரு ஜெனரல் கேட்டார். மேலும் அவர்கள் எங்களுடன் முகாமிலேயே தங்கினர்,” என்று ஹின் நீ நினைவு கூர்ந்தார். “நாங்கள் பாடினோம். நான் கெமர் மற்றும் புனாங் ஆகிய இரண்டு மொழிகளில் பிரசங்கம் செய்தேன்.”
வியட்நாமிய கம்யூனிஸ்டுகளும் பாடலைக் கேட்டு அணுகினர். ஆனால் ஃபுல்ரோ மற்றும் கெமர் ரூஜ் படையினர் அவர்களை விரட்டியடித்தனர்.
ஃபுல்ரோ குழுவின் போதகராக இருந்ததோடு, ஹின் நீ அதன் தலைமை தொடர்பு அதிகாரியாகவும் இருந்தார். இது உள்ளூர் கெமர் ரூஜ் படைகளைக் கையாள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதைக் குறிக்கும். மேலும், பிபிசி, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மற்றும் வியட்நாமிய வானொலி உட்பட வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு பனிப்போர் குறித்த தகவல்களைப் பெறுவதிலும் அவர் எப்போதும் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.
1991 வாக்கில், அப்போதைய கம்போடிய பிரதம மந்திரி ஹுன் சென் 38 ஆண்டுகள் ஆட்சிக்குப் பின் அப்போது தான் தனது மகனுக்கு ஆட்சியை ஒப்படைத்தார். அந்த காலகட்டத்தில் ஹின் நீக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக இந்த நிகழ்வு மாறியது.
ஆனால் ஒரு சில உள்ளூர் கெமர் ரூஜ் மற்றும் கம்போடிய வீரர்களைத் தவிர, ஃபுல்ரோ போராளிகள் இன்னும் காட்டில் இருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. அவர்களின் முன்னாள் தோழர்களுக்கு அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்பது கூடத் தெரியாது, அவர்கள் இருந்த இடம் உலகத்துடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாத பகுதியாக இருந்தது.
எனவே, 1992 இல், ஹின் நீ ஐ.நா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஐ.நா. அதிகாரிகள் இனப்படுகொலையை அடுத்து நடைபெற்ற தேசியத் தேர்தலின் போது, கம்போடியாவில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அங்கு வந்திருந்தனர்.
காட்டுக்குள் ஃபுல்ரோ அமைப்பினர் தொடர்ந்து தங்கள் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
ஹின் நீ, ஐ.நா.வின் உள்ளூர் அதிகாரி ஒருவரைச் சந்தித்து, பிரெஞ்சு மொழியில் ஒரு காகிதத்தில் எழுதினார்: “நாங்கள் ஃபுல்ரோ – எங்கள் விடுதலைக்காகக் காத்திருக்கிறோம். உங்கள் உதவிக்காக காத்திருக்கிறோம்.”
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஐநா அதிகாரிகள் குழு ஒன்று ஹின் நீயைச் சந்திக்க வந்தது. “நான் ஏன் காட்டில் வாழ்ந்தேன் என்பதை உறுதிப்படுத்த அவர்கள் ஒரு வாரம் என்னை விசாரித்தனர்,” என்று அவர் கூறுகிறார். அவர் கெமர் ரூஜ் படையைச் சேர்ந்தவர் என்றே அவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால், அப்படியில்லை என்று ஐ.நா. அதிகாரிகளுக்குப் ஹின் நீ புரியவைத்தார்.
மற்றொரு ஐ.நா. கூட்டத்தைத் தொடர்ந்து, ஹின் நீ “கம்யூனிஸ்டுகளை எதிர்த்துப் போராட” மேலும் ஆயுதங்களைக் கோரினார். ஆனால் அது சாத்தியமில்லை என்று ஐ.நா. அதிகாரிகள் கூறிவிட்டனர்.
“உங்களிடம் 400 போராளிகள் மட்டுமே உள்ளனர் – வியட்நாமில் பல லட்சக்கணக்கான கம்யூனிஸ்ட் வீரர்கள் உள்ளனர். நீங்கள் இறப்பதை நாங்கள் விரும்பவில்லை” என்று அவர் பதிலளித்தார்.
பின்னர் ஆகஸ்ட் 1992 இல், அமெரிக்க பத்திரிகையாளர் நேட் தாயர் அந்த முகாமுக்கு வந்தார். அதன் பின்னர் தான் கடைசி ஃபுல்ரோ போராளிகளின் கதை வெளி உலகுக்குத் தெரிந்தது.
தங்களுக்குத் தெரியாத, 17 ஆண்டுகளுக்கு முன்பு கெமர் ரூஜால் தூக்கிலிடப்பட்ட தங்கள் தலைவரின் அறிவுறுத்தல்களுக்காக இந்தக் குழு இன்னும் காத்திருப்பதாக நாம்பென் போஸ்ட் இதழில் தாயர் தெரிவித்தார்.
“தயவுசெய்து, எங்கள் தலைவரான ஒய் பாம் எனுவோலைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவ முடியுமா?” ஃபுல்ரோ கமாண்டர்-இன்-சீஃப் ஒய் பெங் அயூன் கேட்டார். “நாங்கள் 1975 முதல் எங்கள் தலைவரின் தொடர்பு மற்றும் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவர் எங்கே இருக்கிறார் தெரியுமா?”
அவர் இறந்துவிட்டதாகக் கூறியதும் அந்தக் குழுவில் இருந்த சிலர் கதறி அழுதனர். ஃபுல்ரோ தலைவரின் மரணம் பற்றிய செய்தி அவரது சிற்றலை வானொலிச் செய்திகள் மூலம் ஹின் நீயை எட்டவில்லை.
பத்திரிகையாளர் நேட் தாயர் 1992 இல் ஃபுல்ரோ முகாமுக்குச் சென்று அங்கிருந்தவர்களுடன் உரையாடினார்.
அவரும் அவரது குழுவினரும் போர் முடிந்துவிட்டதாகக் கேள்விப்பட்டார்கள். ஆனால் அமெரிக்கா மீண்டும் தொடர்பு கொண்டு ஆதரவை வழங்கக் கூடும் என்ற இலேசான நம்பிக்கை இன்னும் இருந்தது. அவர்கள் எல்லையில் சிக்கியிருந்தாலும், ஃபுல்ரோ போராளிகள் தங்கள் தாயகத்திற்கான போராட்டத்தை கைவிட்டு அகதிகளாக மாறுவதை ஏற்கவில்லை.
ஹின் நீயிடம் அமெரிக்காவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. “எனக்கு கோபம் இல்லை. ஆனால் அமெரிக்கர்கள் எங்களை மறந்துவிட்டார்கள் என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது, அமெரிக்கர்கள் எங்கள் மூத்த சகோதரர் போன்றவர்கள். எனவே எங்கள் சகோதரர் எங்களை மறப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது,” என்று அவர் தாயரிடம் கூறினார்.
தங்கள் தலைவர் மறைந்துவிட்டார் என்பதை அறிந்ததும், ஃபுல்ரோ போராளிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட ஒப்புக்கொண்டனர் என்பது மட்டுமல்ல, அமெரிக்கா புகலிடம் அளிக்கக் கோரினர்.
இக்குழுவினர் சாதாரண அகதிகளின் வழிகளைத் தவிர்த்து வேறு வழியில் பயணம் செய்து சில மாதங்களில் விமானங்களில் பயணம் மேற்கொண்டனர். ஃபுல்ரோ குழுவினர் தங்கள் கதையை உலகிற்குச் சொல்ல உதவியதாகக் கருதப்படும் தாயர், ஒவ்வொரு அடியிலும் அவர்களுடன் இணைந்து பயணித்தார். (அவர் ஜனவரியில் உயிரிழந்தார். அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கும் பணிகள் ஹின் நீயின் தலைமையில் நடைபெற்றன. அவருடைய குழுவில் இருந்த வீரர்களும் அதில் பங்கேற்றனர்.)
நவம்பர் 1992 இல் மீண்டும் அமெரிக்காவில் தரையிறங்கிய ஹின் நீக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் “மறக்கப்பட்ட இராணுவத்தை” வரவேற்கும் பதாகைகள் மூலம் வரவேற்கப்பட்டார். அவரும் எச் பியூவும் அமெரிக்காவில் தங்கியிருக்கும் தங்கள் குழந்தைகளுடன் கிரீன்ஸ்போரோ என்ற நகருக்கு குடிபெயர்ந்தனர்.
அதன் பின் விரைவில் ஹின் நீ தனது மக்கள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக பேசத் தொடங்கினார். அது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திலும் சாட்சியமளித்தார். அவரது மதப் பிரசங்கத்தின் காரணமாக, அவர் இன்றுவரை வியட்நாமிய அரசு ஊடகங்களில் ஒரு பேசுபொருளாகவே இருந்துவருகிறார்.
வியட்நாமிய அரசாங்கம் ஃபுல்ரோ இன்னும் இருப்பதாகக் கூறுகிறது. மேலும் ஹின் நீ போன்ற நாடு கடத்தப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் வியட்நாமில் கிளர்ச்சியை நடத்த முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டுகிறது. 2021 ஆம் ஆண்டில், VOV செய்தி நிறுவனம், “ஒருங்கிணைந்த வியட்நாமிய அரசை நாசப்படுத்த உள்ளூர் மக்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட மத்திய ஹைலேண்ட்ஸை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதப் பிரிவாக மாறுவேடமிட்ட ஒரு பிற்போக்கு அமைப்புக்குப் பின்னால்,” அவர் இருப்பதாகக் கூறியது.
அடர்ந்த காட்டுப்பகுதியிலிருந்து விடைபெற்ற ஹின் நீ, அமெரிக்காவின் க்ரீன்ஸ்போரோவில் ஒரு தேவாலயத்தை நிறுவினார்.
கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ், வியட்நாமில் மான்டாக்னார்டுகள் இன்னும் பரவலான மிரட்டல், தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் மோசமான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
இது குறித்து கருத்து கேட்க முயன்ற போது வியட்நாம் அரசு பதிலளிக்கவில்லை.
கிரீன்ஸ்போரோவில் உள்ள ஹின் நீயின் யுனைடெட் மான்டாக்னார்ட் (United Montagnard) தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர் அவர்களுக்கு ஆங்கிலம், வியட்நாம் மற்றும் ரேட் மொழிகளில் பிரசங்கம் செய்கிறார். மேலும் சில சமயங்களில் மத்திய மலைநாட்டின் பிற மொழிகளில் பாடல்களையும் பாடுகிறார்.
“அவர்கள் இன்னும் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்துவருகிறார்கள். ஆனால் ஃபுல்ரோ எப்போதோ இறந்துவிட்டார். எல்லோரும் இறந்துவிட்டார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
“வியட்நாமியர்கள் வியட்நாமில் உள்ள மக்களின் வாயை மூட முயற்சிக்கிறார்கள் – ஆனால் நான் இங்கே இருக்கிறேன்.”