பிரித்தானியாவை உலுக்கிய பெண் தாதி விவகாரம் – நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு !!
பிரித்தானிய மருத்துவமனையில் ஏழு குழந்தைகளை கொலைசெய்து நாட்டை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தாதி லூசி லெட்பிக்கு இன்று மஞ்செஸ்டர் முடிக்குரிய நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் நவீன வரலாற்றில் மிகக்குருரமாக குழந்தைகளை கொன்ற தொடர் கொலையாளியாக பதிவாகியுள்ள லூசி லெட்பி தனக்குரிய தண்டனை அறிவிப்பை அறிந்துகொள்ளும் வகையில் இன்று நீதிமன்றத்தில் தோன்ற மறுத்திருந்தார். எனினும் அவருக்கு தண்டனைகாலம் குறைக்கப்படாத வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
பிரித்தானியாவில் நவீன வரலாற்றில் சீரியல் கில்லர் எனப்படும் தொடர்கொலையாளிகள் சிலர் இருந்தாலும் இந்தப்பாணியில் தொடர்ச்சியாக குழந்தைகளை கொன்ற குருரமான ஒரு கொலையாளியாக 33 வயதுடையவரும் சாந்தமான முகம் கொண்டவருமான லூசி லெட்பி மாறியுள்ளார்.
கடந்த 2015 மற்றும் 2016 க்கு இடையில் இவர் செஸ்டர் மருத்துவமனையின் சிறார் பிரிவில் பணிபுரிந்த காலத்தில் ஏழு குழந்தைகளைக் கொன்று மேலும் ஆறு குழந்தைகளைக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஆயினும் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தேவந்துள்ளார்.
குறித்த தாதி சிசுக்களை கொலை செய்வதான ஐயங்கள் சக ஊழியர்களுக்கு ஏற்பட்டிருந்த போதிலும் மருத்துவமனையின் நிர்வாகம் இவரை ஒரு நல்ல தாதியாக கருதி அவர்தவறு செய்த விடயத்தை ஆரம்பத்தில் நம்ப மறுத்தமை இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு விடயமாக மாறியிருந்தது.
லூசி லெட்பி வேண்டுமென்றே சில குழந்தைகளுக்கு நீரிழிவுக்கு பயன்படுத்தப்படும் இன்சுலின் மருந்தை ஏற்றி கொலை செய்ததாகவும் சில சிசுக்களுக்கு அதிக அளவில் பால் ஊட்டி அவர்களை மூச்சடைக்க வைத்து கொன்றதாகவும் அதேபோல சில குழங்தைகளுக்கு தேவையற்ற வகையில் ஒட்சினை உட்செலுத்தி கொலைகளை செய்தாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
ஒன்பது மாதகாலமாக இடம்பெற்ற விசாரணைகள் மற்றும் மூன்று வார காலமாக நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைகளுக்கு பின்னர் யூரிகள் எனப்படும் தீர்பாபய உறுப்பினர்கள் லூசி லெட்பி மீதான குற்றங்களை உறுதிப்படுத்தியதையடுத்து இன்று அவருக்குரிய ஆயுள் தண்டனை நீதிமன்றத்தால் அறிவிக்கபட்டது.
இந்த தீர்ப்பை வழங்கமுன்னர் நீதிபதி குற்றங்களின் பாரதூரத்தன்மை குறித்த குறிப்புக்களை வழங்கினார். இதற்கிடையே குற்றவாளி இன்று நீதிமன்றத்தில் தோன்ற மறுத்தமை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் ரிஷி சுனக், தனது குற்றத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்படுத்திய தாக்கங்களை கேட்பதற்கு மறுத்து நீதிமன்றத்தை புறக்கணித்த நகர்வு கோழைத்தனம் என கண்டனம் தெரிவித்தார்.
இனிமேல் இவ்வாறான குற்றவாளிகள் தமது தண்டனை அறிவிப்பின் போது நீதிமன்றத்தை புறக்கணிக்க முடியாத படி அரசாங்கம் சட்டங்களை மாற்றும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவரது கொலைக்குற்றங்கள் பிரித்தானிய மருத்துவகட்டமைப்பின் தோல்விகளை அம்பலப்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
லெட்பி மீதான சந்தேகத்தில் அவரை பணியில் இருந்து நீக்குமாறு முன்வைக்கப்ட கோரிக்கைகள் மருத்துவமனை நிர்வாகத்தால் முதலில் மறுக்கப்பட்டதுடன் அவர் மீது குற்றச்சாட்டுகளை தொடுத்தவர்களை அவரிடம் மன்னிப்பு கோரும் மருத்துவமனையின் உயர் அதிகாரிகள் வலியுறுத்திய விடயமும் வெளிவந்துள்ளது.