போலி விசாக்களில் பறக்க முயல்வோருக்கு சிக்கல் !!
போலி விசாக்களில் சட்டவிரோதமாக இலங்கையை விட்டு குடியகல்வதை தடுப்பதற்கான பாதுகாப்பான குடியகல்வு ஊக்குவிப்பு பிரிவு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ் நாணயக்காரவினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாட்டு முனையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
போலி விசாவில் ஓமான், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு பலர் சென்றுள்ளதாகவும், இது பாரதூரமான பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
சட்டவிரோத பயண ஆவணங்களில் பயணிகளின் நடமாட்டத்தை தடுக்க பாதுகாப்பு அமைச்சு மற்றும் மனித கடத்தலை தடுக்கும் தேசிய பணிக்குழுவின் பரிந்துரையின் பேரில்குறித்த பிரிவு பிரிவு நிறுவப்பட்டது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த பிரிவில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவற்றின் அதிகாரிகளை உள்ளடங்குகின்றனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னோடித் திட்டமாகச் செயற்படும் என்றும் அதன் பின்னர் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.