;
Athirady Tamil News

13 ஆவது திருத்தம் அமைச்சரவைக்கு வருகிறது !!

0

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான முக்கிய பிரேரணைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக விவாதங்களுக்கு பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரியவருகிறது.

முன்னதாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பான யோசனைகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

பிரேரணைகளை அனுப்புமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கு சில பிரதான கட்சிகள் பதிலளித்துள்ளதுடன், சில கட்சிகள் பதிலளிக்கவில்லை.

மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த வேண்டும் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி, ஆனால் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இது சரியான நேரம் அல்ல என்று தெரிவித்துள்ளது.

மாகாண ஆளுநர்களுடனும், பிரதம செயலாளர்களுடனும் கடந்த வியாழக்கிழமை (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின் போது, தனது திட்டங்களை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி, புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாகாண ஆளுநர்களுடனும் பிரதம செயலாளர்களுடனும் கலந்தாலோசித்து, ஒரு மாத காலத்திற்குள் இது தொடர்பான அறிக்கையைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.