ஆப்கனில் கட்டுக்கடங்கா மனித உரிமை மீறல்.. 200-க்கும் அதிகமானோர் கொலை – ஐ.நா. அதிர்ச்சி தகவல்!!!
பயங்கரவாத பரவலை அழிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகளின் துருப்புகள், 2001-ல் ஆப்கானிஸ்தானில் தங்களை நிலைநிறுத்தி கொண்டு, அங்கிருந்த தலிபான் அமைப்பினரை விரட்டியடித்தது.
ஆனால், கடந்த 2021ம் வருடம் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. இதனையடுத்து, சுமார் 20 வருடங்கள் கழித்து மீண்டும் தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என அஞ்சி, அங்கு அதுவரை ஆட்சி செய்து வந்த அஷ்ரப் கானி, அந்நாட்டை விட்டே வெளியேறினார். அதற்கு பிறகு தற்போது வரை நடைபெறும் தலிபான்கள் ஆட்சியில் மனித உரிமைகளை கண்டு கொள்ளாமல் பல கடுமையான சட்டங்களை அந்த அரசாங்கம் போட்டிருக்கிறது. இவற்றை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உனாமா (UNAMA) எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தானுக்கான உதவும் அமைப்பு, அங்கு நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை குறித்தும், தலிபான்களின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் குறித்தும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், “ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவம், சட்டம் மற்றும் அரசாங்க அமைப்பை சேர்ந்த சுமார் 200 பேரை தலிபான் கொன்றிருக்கிறது.
தலிபானின் பழைய எதிரிகள் என கருதப்படும் ஆப்கானிஸ்தானின் முந்தைய அரசாங்கத்தின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என தலிபான் வாக்குறுதி கொடுத்தது. ஆனால், இதை மீறும் விதமாக இவை அனைத்தும் சட்ட விரோதமாக நடைபெற்றுள்ளன.” “சுமார் 218 பேர் நீதிக்கு புறம்பான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் பாதிக்கும் மேல் தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களுக்காகவே நடைபெற்றிருக்கிறது. அனேக குற்ற செயல்களுக்கு குற்றவாளிகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விளைவுகளை பற்றி கவலைப்படாமல் முன்னாள் அரசாங்க அதிகாரிகள் அழிக்கப்படுவது தொடர்ந்து வருவது கவலைக்குரிய ஒன்று.” “முன் அறிவிப்பின்றி கைது செய்தல், சித்தரவதை செய்தல் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் சம்பந்தமான 800-க்கும் மேற்பட்ட சம்பவங்களை பதிவு செய்திருக்கிறோம்.
காபுல், காந்தகர் மற்றும் பால்க் பிராந்தியங்களில் இவை அதிகமாக நடைபெற்று இருந்தாலும், 34 பிராந்தியங்களிலும் இவை பதிவாகியுள்ளன,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள தலிபான் அமைப்பு, “முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த அரசாங்க மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது என மூத்த தலிபான் தலைவர்கள் முடிவு செய்தனர். இது மீறப்பட்டதாக எங்கும் புகார்கள் வரவில்லை. முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த யாரும் முறையற்ற வழியிலோ, நீதிக்கு புறம்பாகவோ கைது செய்யப்படவோ, காவலில் வைக்கப்படவோ, சித்தரவதை செய்யப்படவோ இல்லை,” என்று தெரிவித்துள்ளது.