யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்ததை கிண்டலடித்து கருத்து வெளியிட்ட கேரள மந்திரி!!
நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக இமயமலை செல்வதை தவிர்த்து வந்தார். மேலும் கொரோன தொற்று பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இமய மலைக்கு செல்லவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரஜினிகாந்த், கடந்த 9-ந்தேதி பெங்களூரு சென்று, அங்கிருந்து டேராடூன் வழியாக இமயமலைக்கு சென்றார். அந்த பயணத்தை முடித்துக்கொண்டு உத்தர பிரதேச மாநிலத்துக்கு சென்ற ரஜினிகாந்த், அம்மாநில முதல்-மந்திரியான யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார்.
அப்போது ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத்தின் கால்களில் விழுந்து வணங்கினார். ரஜினிகாந்தின் இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதுகுறித்து ரஜினியோ, “வயதில் சிறியவராக இருந்தாலும் சன்னியாசிகள், யோகிகள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் செய்தேன்” என்றார். இந்நிலையில் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி, தனது பேஸ்புக் பதிவில் ரஜினியை கிண்டலடித்து பதிவை வெளியிட்டுள்ளார்.
“ஹூகும் ஜெயிலர்” என்ற ஹேஸ்டேக்குடன் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உடலை நீட்டுவதும், வளைப்பதும் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. இருப்பினும் நம் சூப்பர் ஸ்டார் யோகி போன்ற ஒருவரின் முன் வளைந்த விதம், அவரது முதுகை எளிதில் உடைக்கக்கூடும். அவர் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்” என்று கூறியிருக்கிறார். ரஜினி குறித்து கேரள மந்திரியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.