தேர்தல் மோசடி வழக்கு: டிரம்ப் 24-ந்தேதி கோர்ட்டில் சரண் அடைகிறார்!!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியதாக டிரம்ப் மற்றும் 18 பேர் மீது ஜார்ஜியா கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகுமாறு டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது.
அவருக்கு 25-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் மோசடி வழக்கு தொடர்பாக ஜார்ஜியா கோர்ட்டில் வருகிற 24-ந்தேதி டிரம்ப் சரண் அடைகிறார். இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் கூறும்போது, உங்களால் நம்ப முடிகிறதா? கைது செய்யப்படுவதற்காக நான் வியாழன் அன்று ஜார்ஜியாவின் அட்லாண்டாவுக்கு செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப் கோர்ட்டில் ஆஜராகுவதையடுத்து ஜார்ஜியாவில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிரம்ப் மீது ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது, அரசின் ரகசிய ஆவணங்களை வீட்டில் பதுக்கியது உள்ளிட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.