இன,மத, பிரிவினைவாத மோதல்கள் ஏற்படலாம் !!
குருந்தூர் விகாரையை அடிப்படையாகக் கொண்டு இனவாத, மதவாத மற்றும் பிரிவினைவாத மோதல் இந்த விகாரையை அடிப்படையாகக் கொண்டு ஏற்படலாம் என்று இந்திய புலனாய்வுத்துறை கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்றும் இதற்கு தொல்பொருள் திணைக்களமே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் சுயாதீன எதிரணி குழுவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, பௌத்த சாசன, மத விவகார மற்றும் கலாசார விவகார அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே ஜயந்த சமரவீர இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“குருந்தூர் விகாரை என்பது வடக்கில் உள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க பெரிய விகாரையாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு சர்ச்சைக்குரிய விடயங்கள் செய்திகளில் வெளிவருகின்றன.
இதன்படி இனவாத, மதவாத மற்றும் பிரிவினைவாத மோதல் இந்த விகாரையை அடிப்படையாகக் கொண்டு ஏற்படலாம் என்று இந்திய புலனாய்வுத்துறை கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொல்பொருள் திணைக்களம் தமது கடமைகளை முறையாக செய்யாத காரணத்தினாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அங்கு விகாரை இருந்தமை தொல்பொருள் அகழ்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளமை உண்மையாகும்.
அவ்வாறு இருக்கையில் அங்கு பௌத்த சின்னங்கள் அங்கிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன. இந்தவிடயத்தில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு எவருக்கும் சவால் விடுக்க முடியாது.
ஆனால் இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடத்தை தமிழ், இந்து ஆலயமாக காட்டும் முயற்சி உள்ளது. அதுவே இனவாத, மதவாத மோதல்களுக்கு கொண்டு செல்கின்றது. இதற்கு தொல்பொருள் திணைக்களமே பொறுப்பு கூற வேண்டும். தொல்பொருள் சட்டங்களை இந்த திணைக்களம் மீறுகின்றது.
அண்மையில் பொங்கல் நிகழ்வு அங்கே நடத்தப்பட்டது. இது பௌத்த மக்களின் மனங்களை புண்படச் செய்யும் நடவடிக்கையாகும். நல்லூர் கோயிலுக்கு சென்று பௌத்த போதனையை செய்தால் அது தமிழ் மக்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தும். அங்கு அனைத்து மதத்தவர்களும் செல்வார்கள். அங்கு செல்பவர்கள் சட்டதிட்டங்களை மதித்தே செயற்படுகின்றனர்.
ஆனால் குரூந்தூர் விகாரைக்கு எவருக்கும் வர முடியும் எனினும் பொங்கல் நிகழ்வை நடத்த முடியாது. இந்த விடயத்தில் பொறுப்பற்ற வகையில் நடந்துகொண்ட அதிகாரிகளுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன? என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பௌத்த சாசன, மத விவகார மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கூறுகையில், இந்த விடயம் தொடர்பாக இரண்டு வழக்குகள் உள்ளன. இதனால் பொறுப்புமிக்க எம்.பி. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் அந்த வழக்குடன் தொடர்புடைய விடயம் தொடர்பில் கூறுவதை தவிர்த்துக்கொள்கின்றேன்” என்றார்.