இந்திய இருமல் மருந்தால் குழந்தைகளை இழந்த ஆப்பிரிக்க குடும்பங்களின் மறையாத கோபம்!!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எப்ரிமா சஜ்னியா தனது 3 வயது மகன் கண்முன்னே மெல்ல மெல்ல இறந்ததை தவிப்புடன் பார்ப்பதை தவிர வேறு வழியில்லாமல் தவித்தார்.
காம்பியாவில் வாடகைக் கார் ஓட்டிவரும் சஜ்னியா, தனது மகன் லாமினுக்கு காய்ச்சல் வந்ததற்கு சில வாரங்கள் முன்பாகத் தான், அவன் மழலையர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதாகத் தெரிவிக்கிறார். குழந்தைக்குக் காய்ச்சல் வந்த போது உள்ளூர் மருத்துவர் ஒருவர் சில மருந்துகளை எழுதித் தந்தார். அதில் இருமல் மருந்தும் இருந்தது. ஆனால், குழந்தை இருமல் மருந்தை உட்கொள்ள மறுத்துவிட்டது.
“பலவந்தப்படுத்தி எனது மகனை இருமல் மருந்தை குடிக்கவைத்தேன்,” என்கிறார் காம்பியா தலைநகரான பன்ஜு நகரில் உள்ள தனது வீட்டில் அமர்ந்திருக்கும் சஜ்னியா.
அதற்கடுத்த சில நாட்களில் லாமினின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. சாப்பிடுவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் கூட லாமின் மிகவும் சிரமப்பட்டான். இதைத் தொடர்ந்து குழந்தையை அப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு சஜ்னியா எடுத்துச் சென்றார்.
ஆனால் லாமினின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகம் பழுதடைந்திருந்ததைக் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லாமின், தொடர்ந்து உடல் நிலை மோசமாகி அடுத்த 7 நாட்களுக்குள் பரிதாபமாக உயிரிழந்தான்.
காம்பியாவில் கடந்த ஆண்டு ஜுலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே இதே போல் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட 5 வயதுக்கும் குறைவான 70 குழந்தைகளின் மரணங்களில் ஒன்று தான் லாமினின் மரணம். இந்த குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்த மெய்டன் ஃபார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகளில் ஏதாவது ஒன்றைக் எடுத்துக்கொண்டவர்களாக இருந்தனர்.
அந்த குழந்தைகள் குடித்த இருமல் மருந்துகளில் அளவுக்கு அதிகமாக நச்சுத்தன்மை இருந்ததாக அக்டோபர் மாதம் உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்தது.
காம்பிய நாடாளுமன்றக் குழு ஒன்றும் குழந்தைகள் குடித்த இருமல் மருந்தில் நச்சுத்தன்மை இருந்ததாக அறிவித்து தனது விசாரணையை முடித்தது.
ஆனால், மெய்டன் ஃபார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனமும், இந்திய அரசும் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்தன. இது குறித்து டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் அந்த மருந்துகளை உள்நாட்டில் பரிசோதித்த போது அனைத்து தரக்கட்டுப்பாட்டு சோதனைகளிலும் தேர்வு செய்யப்பட்ட பின்னர் தான் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உயிரிழப்புகள் குறித்து விசாரித்த காம்பியன் குழுவின் தலைவரான அமடோ கமாரா இந்த அறிவிப்பை முழுமையாக நிராகரித்தார்.
“எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. இந்த மருந்துகளை நாங்கள் பரிசோதனை செய்தோம். அவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு எத்திலீன் கிளைகோல் மற்றும் டைதிலீன் கிளைகோல் ஆகிய வேதிப்பொருட்கள் இருந்தன. இந்த மருந்துகள் நேரடியாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. மெய்டன் நிறுவனம் தயாரித்தவை,” என்று அவர் கூறுகிறார். எத்திலீன் கிளைகோல் மற்றும் டைதிலீன் கிளைகோல் ஆகியவை நச்சுத்தன்மை வாய்ந்தவை மற்றும் அவற்றை உட்கொண்டால் மனிதர்கள் உயிரிழக்க நேரிடும்.
இந்தியாவில் இருந்து அதிகளவில் மருந்துகளை இறக்குமதி செய்யும் காம்பியாவில் இந்த மரணங்கள் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
ஆப்பிரிக்க கண்டத்தின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான காம்பியாவிற்கு இது ஒரு கடினமான நேரமாகும். இந்நாடு இந்தியாவிலிருந்து தான் பெரும்பாலான மருந்துகளை இறக்குமதி செய்கிறது. குழந்தைகளை இழந்த சில பெற்றோர்கள், தாங்கள் இனி இந்திய தயாரிப்பு மருந்துகளை நம்பப்போவதில்லை என்று கூறுகிறார்கள்.
இது குறித்து ஒன்பது மாத மகனை இழந்த லாமின் டான்சோ கூறுகையில், “இந்தியாவில் இருந்து ஒரு மருந்து வாங்கப்பட்டதாக நான் தெரிந்துகொள்ளும் போது, அதைத் தொடக்கூட நான் விரும்புவதில்லை,” என்கிறார்.
இந்திய மருந்துகளின் மீதான இந்த அவநம்பிக்கை விரைவில் மாற வாய்ப்பில்லை.
ஆனால், “பெரும்பாலான மருந்தாளுனர்கள் இன்னும் இந்தியாவில் இருந்து தான் மருந்துகளை வாங்குகின்றனர். இது அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்வதை விட மிகவும் மலிவாக இருக்கிறது,” என்கிறார் பத்திரிகையாளர் முஸ்தபா டர்போ.
வளரும் நாடுகளின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம், ஜெனரிக் மருந்துகளை உலகின் மிகப்பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. ஆனால் காம்பியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் இந்திய மருந்துகள் சோக முடிவுகளை ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள், இந்தியாவில் மருந்து உற்பத்தி நடைமுறைகள், தரக்கட்டுப்பாடு போன்றவை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
“இந்த சோகங்கள் மற்றும், உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கைகளால், இந்தியாவில் இருந்து மருந்துகளை வாங்க பல நாடுகள் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கின்றன. அந்நாடுகள் தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருகின்றன. இது இந்திய மருந்துகள் குறித்த சர்வதேச அளவில் நிலவிய பிம்பத்தை உடைத்துள்ளன,” என்கிறார் இந்திய மருந்து ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலின் டைரக்டர் ஜெனரல் உதய பாஸ்கர்.
காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் நேர்ந்த துயர சம்பவங்களால் இந்திய மருந்துத் துறையின் மீதான நல்ல எண்ணம் மாறியிருந்தாலும், அது ஏற்றுமதியை பாதிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
மார்ச் 2023 இல் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியா 25.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது. இவற்றில் 3.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துகள் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா ஏற்கனவே 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது என்று பாஸ்கர் கூறினார்.
ஆனால், இருமல் சிரப் உள்ளிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு முன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் மருந்து மாதிரிகளை பரிசோதனை செய்வதை கட்டாயமாக்குவது போன்ற நடவடிக்கைகளை இந்தியா அறிவித்துள்ளது. மருந்து பரிசோதனைக் கூடங்கள் இல்லாத காம்பியாவும், ஜூலை முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கும் இது போன்ற சோதனையைக் கட்டாயமாக்கியுள்ளது.
இந்தியா தனது மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், உலக சுகாதார அமைப்பு விதித்துள்ள தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட முறையில் தயாரிப்பதை உறுதிப்படுத்த காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சில குடும்பங்கள் காம்பியா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
ஆனால் சில இந்திய ஆர்வலர்கள் நாட்டில் நீண்ட காலமாக “இரண்டு விதமான உற்பத்தி முறை” கடைபிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
“அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மருந்துகள் ஒரு தரத்திலும் உள்ளூர் நுகர்வுக்காக தயாரிக்கப்பட்ட அல்லது குறைந்த ஒழுங்குமுறைகளைக்கொண்டுள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் ஒரு தரத்திலும் இருக்கின்றன,” என்று பொது சுகாதார ஆர்வலர் தினேஷ் தாக்கூர் குற்றம் சாட்டுகிறார்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதித் தலமான ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் “வலுவான” ஒழுங்குமுறை வழிமுறைகள் உள்ளன என்று கூறும் உதய பாஸ்கர், இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தார்.
காம்பியாவில் அந்த துயர சம்பவம் நடந்த பின்னர் அந்நாட்டு அரசு மருத்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்களை நிறுவப் பரிந்துரைத்தது மட்டுமின்றி இரண்டு மருந்து கட்டுப்பாட்டாளர்களையும் பதவி நீக்கம் செய்துள்ளது.
“பொதுமக்களிடையே நிலவும் கோபத்தை நாங்கள் நன்றாக அறிந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களிடையே நிலவும் துயரத்தையும் நாங்கள் அறிந்துள்ளோம்,” என்கிறார் காம்பிய தேசிய சட்டமன்றத்தின் பெரும்பான்மைத் தலைவரும் அரசின் வணிகத் தலைவருமான பிலே ஜி துங்கரா.
ஆனால் கடந்த ஆண்டில் காம்பியாவின் சுகாதாரத் துறையில் எதுவும் மாறவில்லை என்று பேரிழப்புகளை எதிர்கொண்ட பெற்றோர்கள் கூறுகிறார்கள். காய்ச்சல் பாதிப்புகளைக் குறைக்க முடியாமல் மருத்துவத் துறை தடுமாறும் நிலையில் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அண்டை நாடான செனகலுக்கு அனுப்பி சிகிச்சை பெற நிதி திரட்டவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
மரம் விற்று பிழைப்பை நடத்திவரும் மொமோடௌ டாம்பெல்லா, அவர்களில் ஒருவர். அவர் கடைசியாக தனது 22 மாத மகள் அமினாதாவை வீடியோ காலில் பார்த்தார். அதில் அந்தக் குழந்தை ஒரு மருத்துவமனையின் படுக்கையில் பேச்சுமூச்சற்ற நிலையில் படுத்திருந்தது.
“குழந்தையின் தலை அசைவதை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. நான் தான் உன்னுடைய அப்பா என குழந்தைக்குத் தெரியப்படுத்த முயற்சித்தேன்,” என்று அவர் கூறுகிறார். அந்த வீடியோ கால், குழந்தையின் உயிரிழப்புக்கு சற்று முன்னர் தான் வந்தது.
பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் பிரதிநிதியாகச் செயல்படும் குழுவின் செய்தித் தொடர்பாளர் எப்ரிமா ஈ எஃப் சைதி கூறுகையில், “இந்தத் துயரத்துக்குக் காரணமாக விளங்கிய சுகாதார அமைச்சர் உட்பட எவரும் சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளவேண்டும்,” என்றார்.
காம்பியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அஹ்மது லாமின் சமதேவிடம் பேச பிபிசி முயன்ற போது எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.
மொமோடௌ டாம்பெல்லா மற்றும் அவரது மனைவி தங்கள் மகளை சிகிச்சைக்காக அண்டை நாடான செனகலுக்கு அனுப்பினர்
அந்த துயர சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகும் நிலையில், மீண்டும் ஒரு முறை அதே போன்ற வலியை அனுபவிக்கக்கூடாது என்பதில் காம்பியாவில் உள்ள மற்ற பெற்றோர்கள் உறுதியாக இருப்பதாக பலர் கூறுகின்றனர்.
19 குழந்தைகளின் குடும்பங்கள் காம்பியா உயர் நீதிமன்றத்தில் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் மற்றும் மெய்டன் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். தேவைப்பட்டால் இந்திய நீதிமன்றங்களையோ, அல்லது சர்வதேச நீதிமன்றங்களையோ அணுகவும் தயங்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
“அரசின் அலட்சியம் எங்கள் வீட்டுக் குழந்தைகளை பரிதாபமாக உயிரிழக்க வைத்தது,” என்று அந்த பிரதிநிதிகள் குழுவில் உறுப்பினராக உள்ள சாக்னியா கூறுகிறார்.