பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை சுட்டுக்கொன்ற சௌதி அரேபிய எல்லைப் படை!!
ஏமன் நாட்டுடனான எல்லைப் பகுதியில் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை சௌதி அரேபிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கொன்று குவித்ததாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில், படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் எத்தியோப்பியாவில் இருந்து போர் நடக்கும் ஏமன் நாட்டைக் கடந்து வந்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இடம்பெயரும் மக்களில் சிலர், துப்பாக்கி சூட்டில் கை-கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் படுகாயங்களுடன் தவித்து வருவதாகவும், அவர்கள் வந்த பாதைகளில் பிணங்கள் கிடந்ததாகவும் தெரிவித்தனர்.
இதுபோன்ற திட்டமிட்ட கொலைகள் பற்றிய குற்றச்சாட்டுகளை சௌதி அரேபியா ஏற்கெனவே நிராகரித்துள்ளது.
இதுகுறித்து ஹெச்.ஆர்.டபிள்யூ என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
சௌதி, ஏமன் ஆகிய இரு நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் கரடுமுரடான வடக்கு எல்லையில் இந்தச் சம்பவம் நடந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, சௌதி போலீசாரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் மழை பொழிவதைப் போல் துப்பாக்கியால் புலம்பெயர்ந்தோரை நோக்கிச் சுட்டதாகவும், அடுத்து சிறிது நேரம் கழித்து வெடிகுண்டுகளால் தாக்கியதாகவும் புலம்பெயர்ந்தோர் தெரிவித்த தகவல்கள் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
புலம்பெயர்ந்தோரை பிபிசி தனித்தனியாகத் தொடர்புகொண்டு பேசுகையில், அவர்கள் கூட்டம் கூட்டமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் எத்தியோப்பியாவில் இருந்து எண்ணெய் வளம் மிக்க சௌதி அரேபியாவில் வேலை தேடி இரவு நேரத்தில் எல்லையைக் கடந்தபோது திகிலூட்டும் வகையில் சௌதி அரேபிய படையினர் தங்களைத் தாக்கியதாகத் தெரிவித்தனர்.
“துப்பாக்கிச் சூடு இடைவிடாமல் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது,” என 21 வயது முஸ்தபா சௌஃபியா முகமது பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் அவர் உள்ளிட்ட 45 பேர் எல்லையைக் கடக்க முயன்றபோது நடந்த தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
“என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைக்கூட நான் உணரவில்லை,” என்று கூறிய அவர், “நான் எழுந்து நடக்க முயன்றபோதுதான் எனது காலின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டதை உணர்ந்தேன்,” என்றார்.
சௌதி அரேபியா-ஏமன் எல்லையில்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று முஸ்தபா சௌஃபியா முகமது கூறுகிறார்.
ஏமன் மற்றும் எத்தியோப்பியாவை சேர்ந்த மனித கடத்தல்காரர்களை நம்பிப் பயணம் மேற்கொண்ட புலம்பெயர்ந்தோர், பட்டினி மற்றும் அச்சம் கலந்த மூன்று மாத கால பயணத்தின் இறுதியில் கொடூரமான, ஆபத்தான, வன்முறைகளோடு அந்தப் பயணத்தை முடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
தாக்குதல் நடந்து சில மணிநேரத்திற்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட காட்சியில் அவரது இடது பாதம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. முஸ்தபாவின் கால் தற்போது முழங்காலுக்குக் கீழே முழுமையாக அகற்றப்பட்ட நிலையில், எத்தியோப்பியாவுக்குத் திரும்பி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். தற்போது ஒரு கரடுமுரடான செயற்கைக் கால் மற்றும் ஊன்றுகோல் உதவியுடன் அவர் நடந்து வருகிறார்.
“நான் எனது குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில், அவர்களுக்கு உதவும் நோக்கில் பணம் சம்பாதிக்க சௌதி அரேபியாவுக்குச் சென்றேன்,” என்று கூறிய இரண்டு குழந்தைகளின் தந்தையான அவர், “ஆனால் எனது நம்பிக்கை நிறைவேறவில்லை. இப்போது எனது பெற்றோர்கள்தான் எனக்கு எல்லா வகையிலும் உதவி வருகின்றனர்,” என்றார்.
எத்தியோப்பியாவைச் சேர்ந்த மற்றொரு நபர் இஸ்பா (அவரைப் பாதுகாக்கும் நோக்கில் பெயரை மாற்றியுள்ளோம்). அவர் பிபிசியிடம் பேசியபோது, எல்லையைக் கடக்க முயன்ற தன்மீது, சௌதி அரேபிய ராணுவச் சீருடை அணிந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவித்தார்.
“அவர்கள் எங்களை அடித்துத் துன்புறுத்தினர். சிலரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். காயங்களுடன் உயிர் பிழைத்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். உயிரிழந்தோரின் பிணங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன,” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“என்னை அவர்கள் துப்பாக்கியால் சுட்டபோது, எனது இடுப்புக்குக் கீழே தொடைகளுக்கு மேல் பகுதியில் குண்டு பாய்ந்தது. அதனால் எனது கால்கள் தற்போது செயலிழந்துவிட்டன. என்னால் நடக்கக்கூட முடியாது. நான் இறந்துவிடுவேன் என்ற பயம் அப்போது எனக்கு ஏற்பட்டது.”
கொலைக்களமான எல்லைப் பகுதி
உயிர் பிழைத்தவர்களில் சிலர் இன்னும் ஆழ்ந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.
ஏமன் தலைநகரில் வசிக்கும் ஜாரா என்ற இளம்பெண், என்ன நடந்தது என்பதை விவரிக்க முடியாத நிலையில் உள்ளார்.
அவருக்கு 18 வயதாகிறது என்றும், ஆனால் அதைவிட குறைந்த வயதுடைய தோற்றத்தைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். (அவருடைய அடையாளத்தைப் பாதுகாக்கும் வகையில் அவரது உண்மையான பெயரை நாங்கள் பயன்படுத்தவில்லை.)
ஏற்கெனவே லஞ்சம் உள்ளிட்ட வகையில் அவருக்கு சுமார் 2,500 அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளன. இந்நிலையில், எல்லைப் பகுதியில் குண்டு மழையையும் அவர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
ஒரு துப்பாக்கித் தோட்டா அவருடைய ஒரு கையில் இருந்த விரல்கள் அனைத்தையும் பிய்த்துவிட்ட நிலையில், அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.
எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகளில் இருந்து சௌதி அரேபியாவுக்கு ஏராளமானோர் வேலை தேடிச் செல்கின்றனர்.
புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சர்வதேச பிரிவு அளிக்கும் தகவலின்படி, பல்லாயிரக்கணக்கான மக்கள் இது போல் ஆப்பிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும் கிழக்கு தீபகற்பத்திலிருந்து ஒவ்வோர் ஆண்டும் சௌதி அரேபியாவுக்கு ஏமன் வழியாக ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்கின்றனர்.
மனித உரிமை அமைப்புகள் அளிக்கும் தகவல்களின்படி பார்த்தால் புலம் பெயர்ந்தோரில் ஏராளமானோர் சிறைபிடிக்கப்படுகின்றனர் அல்லது பல கொடூரமான சூழ்நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றனர்.
கடல் வழியாக இதுபோல் பயணம் மேற்கொள்வது மிகவும் ஆபத்தானது. கடந்த வாரத்தில் மட்டும் புலம்பெயர்ந்தோரில் 24 பேர் ஜிபூட்டி கடல் பகுதியில் படகு கவிழ்ந்தபோது மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் புலம்பெயரும் மக்கள் பயணிக்கும் பாதை முழுவதும் குப்பைகள் போல் உயிரிழந்தோரின் கல்லறைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
ஏமன் நாட்டின் வடக்கில் பெரும்பாலான பகுதிகளைக் கட்டுப்படுத்தும் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் தலைநகர் சனாவில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கான சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகளுக்குன் முன் பற்றிய தீயில் சிக்கி டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
ஆனால் தற்போது ஹெச்.ஆர்.டபிள்யூ. அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் முற்றிலும் வித்தியாசமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
“நாங்கள் அடிப்படையில் வெகுஜன கொலைகளை மட்டுமே ஆவணப்படுத்துகிறோம்,” என இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்த குழுவினரின் தலைவர் நாடியா ஹர்த்மான் பிபிசியிடம் தெரிவித்தார்.
“கொலைக்களமாகத் தோன்றும் பகுதிகளைப் பற்றிப் பேசும் பொதுமக்கள், மலைப்பகுதியில் மனிதப் பிணங்கள் வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கினறனர்,” என்றார் அவர்.
கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு ஜுன் வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ள இந்த ஆய்வறிக்கையில் 14 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் 28 குண்டுவெடிப்பு சம்பவங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
“இந்தச் சம்பவங்களில் உயிர் பிழைத்தவர்கள் எனக்கு அனுப்பிய பதிவுகளில் மிகவும் கொடூரமான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடல் முழுவதும் ஏற்பட்டிருக்கும் குண்டுக் காயங்கள் அதிர்ச்சியூட்டும் விதத்தில் உள்ளன.”
எல்லையில் எத்தனை புலம்பெயர்ந்தோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதைக் கணக்கிட முடியாது என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
எல்லைப்பகுதி தொலைதூரத்தில் இருப்பதால் இதுபோன்ற சம்பவங்களில் தப்பிப் பிழைப்பவர்கள் அல்லது உயிரிழந்தோர் குறித்த விவரங்களைப் பெறுவதில் மிகுந்த சிரமங்கள் இருப்பதாக இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்தவர்கள் கூறுகின்றனர்.
“நாங்கள் குறைந்தது 655 பேர் இதுபோன்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். ஆனால் உண்மையில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்,” என ஹர்த்மான் கூறினார். மேலும், “இது போன்ற திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்கள் அங்கே பரவலாகக் காணப்படும் நிலையில், இது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றே நாங்கள் கருதுகிறோம்,” என்றார் அவர்.
சௌதி அரேபியாவின் பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதியில் பரவலாகத் திட்டமிட்டு கொடூரக் கொலைகளை அரங்கேற்றி வருவது முதன்முதலாக ரியாத்தில் உள்ள அரசுத் தலைமையிடத்துக்கு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பிரதிநிதிகள் எழுதிய கடிதத்தின் மூலம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது.
“புலம்பெயர்பவர்களுக்கு எதிராக சௌதி அரேபிய தரைப்படைகள் கொடூர துப்பாக்கிச் சூடு நடத்துவது, வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது” போன்ற தகவல்களை அந்தக் கடிதம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
இப்படி மிக மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அந்தக் கடிதம் யாருடைய கவனத்தையும் பெரிதாக ஈர்க்கவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டதாகக் கூறும் சௌதி அரேபியா, ஆனால் பெருமளவில் புலம்பெயர்ந்தோர் கொல்லப்படுவது அல்லது அவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கவே இல்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளது.
சௌதி அரேபிய அரசு, “மிகக் குறைந்த சான்றுகள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் அளவுக்கு அரசு இயந்திரத்தால் எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை,” என்று கூறியுள்ளது.
ஆனால் புலம்பெயர்ந்தோருக்காகச் செயல்படும் சர்வதேச அமைப்பு ஒன்று கடந்த மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கை, எல்லையில் நடக்கும் கொடூரத் தாக்குதல்களில் உயிர் பிழைத்தவர்களிடம் பேசியதன் அடிப்படையில், புதிதாக மேலும் பல குற்றச்சாட்டுக்கள் எழுப்பியுள்ளது.
இந்த அறிக்கையில் அழுகிக் கிடக்கும் மனித உடல்கள் எல்லைப் பகுதியில் சிதறிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிடிபட்ட புலம்பெயர்ந்தோரிடம் அவர்களுடைய எந்தக் காலில் சுட வேண்டும் என சௌதி படையினர் கேள்வி கேட்டது, அச்சத்தில் மூழ்கியிருந்த பொதுமக்களை குழு அடிப்படையில் தாக்குவதற்காக இயந்திர துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது போன்ற தகவல்களும் விரிவாக அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
ஆனால் ஹெச்.ஆர்.டபிள்யூ-வின் ஆய்வறிக்கை இன்னும் விரிவாக, பல நேரில் கண்ட சாட்சிகள் அளித்த தகவல்கள், கொலை நடந்ததாகக் கருதப்படும் இடங்களின் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் தற்காலிகமாக உடல்களைப் புதைக்க ஏற்படுத்தப்பட்ட குழிகளின் படங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது.
ஏமன் நாட்டில் புலம் பெயர்ந்தோர் பயன்படுத்தும் பாதைகள் கல்லறைகளால் நிரம்பியுள்ளன.
ஏமன் நாட்டுக்குள் நுழைந்தவுடன் மொனாபி என்ற இடத்தில் இருக்கும் சிறைச்சாலை ஒன்றில் சிறை வைக்கப்படும் புலம்பெயர்வோர், பின்னர் ஆயுதங்கள் ஏந்திய கடத்தல்காரர்களால் எல்லைப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஹெச்.ஆர்.டபிள்யூ.-விடம் பேசிய ஒருவர், மொனாபியில் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் அந்தச் சிறைச்சாலை இருப்பதாகவும், கிளர்ச்சியாளர்கள் கடத்தல்காரர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
ஒரு தடுப்பு வேலி அமைக்கப்பட்ட பகுதிக்குள் ஆரஞ்சு வண்ண தற்காலிக குடில்கள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படம் ஒன்று தெளிவாகக் காட்டுகிறது.
ஹெச்.ஆர்.டபிள்யூ-வின் ஆய்வறிக்கை இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான நிகழ்வுகளை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கும் நிலையில், தொடர்ந்து அதுபோல் கொடூர கொலைகள் அரங்கேற்றப்பட்டு வருவதற்கான ஆதாரங்களை பிபிசி வெளிப்படுத்தியுள்ளது.
வடக்கு நகரமான சாதாவில், எல்லையில் காயமடைந்த புலம்பெயர்ந்தோர் வெள்ளிக்கிழமையன்று தாமதமாக மருத்துவமனைக்கு வந்த காட்சிகள் பிபிசிக்குக் கிடைத்துள்ளன. அங்கு அருகில் உள்ள மயானத்தில், உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வந்தன.
ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஆய்வறிக்கை, புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் அறிக்கை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கை ஆகியன எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க சௌதி அரேபிய அரசை பிபிசி அணுகியது. ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
சௌதி அரேபிய அரசின் மூத்த அதிகாரிகள் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பேசுகையில், “இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதுடன் நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை,” என்று கூறினர்.
ஹெச்.ஆர்.டபிள்யூ-வுக்கு ஏமனில் செயல்படும் ஹௌதி கிளர்ச்சியாளர்களின் அரசு எழுதிய பதில் கடிதம் ஒன்றில், ஏமன் நாட்டவர்களும், சௌதி அரேபியாவுக்கு வரும் புலம்பெயர்ந்தோரும் இது போல் வேண்டுமென்றே சௌதி அரேபியப் படைகளால் கொல்லப்படுவது குறித்து நன்றாக அறிந்திருப்பதாகக் கூறியுள்ளது.
ஆனால் அதேநேரம் ஆள் கடத்தல் கும்பல்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஹௌதி கிளர்ச்சிப் படையின் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அதுபோன்ற நபர்களைக் குற்றவாளிகளாகக் கருதுவதாகவும் கிளர்ச்சியாளர்களின் அரசு கூறியுள்ளது.