;
Athirady Tamil News

ஹே சூப்பர் பா.. சந்திரயான்-3 முயற்சியை பாராட்டி இந்தியாவை புகழும் பாக். முன்னாள் அமைச்சர்!!

0

2003 ஆகஸ்ட் 15 அன்று இந்திய சுதந்திர தின விழாவில் அப்போதைய இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது உரையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) மூலம் சந்திரயான் எனும் பெயரில் நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் திட்டம் குறித்து முதன்முதலாக அறிவித்தார். தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திரயான் திட்டத்தை ஊக்குவித்து வருவதை தொடர்ந்து, அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான்-3 எனும் விண்கலத்தை கடந்த ஜூலை 14 அன்று ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக அனுப்பியது.

இந்த விண்கலம் இன்று மாலை 06:04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுவரை நிலவின் தென் துருவத்தில் எந்த நாடும் விண்கலத்தை இறக்கியதில்லை. சமீபத்தில் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியா, லூனா-25 எனும் பெயரில் இதே போன்று நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை இறக்கும் ஒரு முயற்சியை மேற்கொண்டது. ஆனால், சென்ற வாரம் லூனா-25, நிலவில் நொறுங்கி விழுந்ததையடுத்து இந்த முயற்சி தோல்வியடைந்தது. இதன் பின்னணியில் இந்தியாவின் முயற்சி வெற்றி அடைவதை உலகமே பெரும் எதிர்பார்ப்புடன் ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முந்தைய அதிபர் இம்ரான் கான் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்த ஃபவத் அஹ்மத் ஹுசைன் சவுத்ரி, இந்தியாவின் முயற்சியை வரவேற்றுள்ளார்.

இது குறித்து எக்ஸ் (டுவிட்டர்) பதிவில் அவர், “பாகிஸ்தான் ஊடகங்கள் இந்தியாவின் சந்திரயான் நிலவில் இறங்கும் நிகழ்வை பிரபலப்படுத்தி இந்த செய்தியை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். இது மனித குலத்திற்கே ஒரு மகத்தான தருணம். குறிப்பாக, இந்திய மக்களும், விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் பெருமைப்பட வேண்டிய நிகழ்வு. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,” என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் அமைச்சர் இந்தியாவையும், இந்திய விஞ்ஞானிகளையும் பாராட்டுவதை இரு நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்க்கும் ஒரு முயற்சியாக வரவேற்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.