சூடானின் உள்நாட்டு போர் – பட்டினியால் 500 சிறார்கள் மரணம் !!
கடந்த மே முதல், ஜூலை வரையில், 316 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதோடு, இதில் பெரும்பாலான குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள் என சூடானின், ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற அமைப்பின் இயக்குனர் ஆரிப் நுார் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆபிரிக்க நாடான சூடானில், இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் வெடித்தது. இது மிகப் பெரிய சண்டையாக உருவெடுத்ததை அடுத்து, தலைநகர் கார்தோம் உள்ளிட்ட நகர்ப்புறங்கள் போர்க்களங்களாக காட்சி அளிக்கின்றன.
நாடு முழுதும் பதற்றம் நீடித்து வருகிறது. பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர்.
நாட்டின் சுகாதார வசதி முற்றிலுமாக முடங்கி உள்ளது. அத்துடன், சரியான உணவு கிடைக்காமல் அந்நாட்டு குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வருகின்றனர்.
இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, 2,400 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு கடாரிப் மாகாணத்தில் உள்ள அரச குழந்தைகள் மருத்துவமனையில், 132 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால், ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான காலத்தில் உயிரிழந்தனர்.
தலைநகர் கார்தோமில் உள்ள அரசு ஆதரவற்றோர் இல்லத்தில், 20க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்பட 50 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு சிகிச்சை பெற முடியாமல், 31,000 குழந்தைகள் தவித்து வருகின்றனர்” என்றார்.