கயத்தாறு அருகே 600 கிலோ சிக்கியது: ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு!!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ராஜபிரபு, பிரெட்ரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை சோதனை செய்தனர். அதில் இருந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கன்டெய்னரை திறந்து சோதனை செய்தனர். அப்போது கன்டெய்னரின் மேல் பகுதியில் ஒரு ரகசிய அறை 300 பிளாஸ்டிக் பைகளில் 600 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி ஆகும். இதையடுத்து லாரியில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், லாரி டிரைவர் புதுச்சேரி ஏனாம் பகுதியை சேர்ந்த சத்திபாபு (வயது 39), தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த விஜயகுமார் (36), தூத்துக்குடி ஆரோக்கியபுரம் கோவில் பிள்ளைவிளையைச் சேர்ந்த மத போதகர் ஜான் அற்புதபாரத் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் லாரியையும் போலீசார் கோவில்பட்டி மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக மது விலக்கு பிரிவு துணை சூப்பிரண்டு சிவசுப்பு, இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ராஜமுந்திரி பகுதியில் இருந்து கன்டெய்னர் லாரியில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர்.
அதனை தூத்துக்குடிக்கு கொண்டு சென்று அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் கூறியதன் பேரில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் தான் இதில் மேலும் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் என்பதால் அவரை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.