தனியாரிடம் மின்சாரம் கொள்வனவு!!
மின்சார நெருக்கடியை தீர்க்கும் வகையில் மாத்தறை ஏஸ் பவர் தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து 23 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டு தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தென் மாகாணத்திற்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்கும் நோக்கில் மாத்தறை ஏஸ் பவர் தனியார் நிறுவனத்திடமிருந்து அவசர கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக எம்பிலிபிட்டிய ஏஸ் பவர் தனியார் நிறுவனத்திடமிருந்தும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை கூறியுள்ளது.
இதேவேளை, தென் மாகாணத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் மின்வலுச் செலுத்தும் பாதை இன்றையதினம் (24) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இரத்தினபுரி, சிறிபாகம தேயிலைத் தோட்டத்தின் மேலாக செல்லும் மின்வலு பாதை குறித்து எதிர்ப்புத் தெரிவித்த தேயிலைத் தோட்டத்தின் காணி உரிமையாளர்களுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கும் திட்டம் தாமதமானது.
எவ்வாறாயினும், ஓகஸ்ட் 11 ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து உரிமையாளர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
தென் மாகாணத்தை இணைக்கும் 220 கிலோவோட் மின்சாரத்திற்கான 150 கிவோ மீற்றர் தொலைவுக்கான மின் இணைப்பு கடந்த 3 மாதங்களில் 650 மீற்றர் நிலத்துக்கான அரசாங்க மதிப்பீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.