இன்னோர் அரசாங்கம் அமையும்!!
பாராளுமன்ற செயலாளர் நாயகமோ அல்லது பிரதி செயலாளரோ இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்பட்டால் அடுத்து இன்னோர் அரசாங்கம் அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. சமிந்த விஜேசிறி பாராளுமன்ற செயலாளருக்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியாக தலையிடுமாறு அரச தரப்பின் பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றம் புதன்கிழமை (23) பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடியதை அடுத்து இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்டஎம்.பி சமிந்த விஜேசிறி ஆகிய இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கத்தின் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தலையிட்டு கூறினார்.
நிதி அமைச்சரிடம் பதுளை மாவட்ட எம்.பி.யான சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதிலளித்த நிலையில் குறுக்கிட்ட சமிந்த விஜேசிறி எம்.பி. “மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி இடம்பெற்ற நேரம் குறித்து கேட்பது எப்படி வழக்குக்கு இடையூறாக அமையும் என்று கூறுங்கள்” எனக்கேட்டார்.
“இதற்கு முன்னரும் பதிலளித்துள்ளோம். எதைக் கேட்டாலும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் அதையே திருப்பி திருப்பி கேட்டு மற்றவர்கள் முட்டாள்கள் என்று அவர் நினைத்தால் நாங்கள் பதிலளிக்கத் தயாராக இல்லை” என்று நிதி இராஜாங்க அமைச்சர் பதிலளித்தார்.
இதன்போது எழுந்த சமிந்த விஜேசிறி எம்.பி. “பாராளுமன்ற செயலாளர் நாயகமோ அல்லது பிரதி செயலாளரோ இந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டால் அடுத்து இன்னொரு அரசாங்கம் அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நான் மிரட்டல் விடுக்கவில்லை. சட்டப்படி என் வேலையைச் செய்கிறேன். அதே கேள்வியை நான் கேட்கவில்லை. கேட்க வேண்டியது எனது பொறுப்பு. என்னை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லுங்கள்” என்றார்.
இதன்போதே குறுக்கிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , “இன்னொரு அரசாங்கம் வரும் வரும் என பாராளுமன்ற செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை கட்டுப்படுத்துங்கள். இல்லாவிடின் இது ஒரு கேலியாக மாறும். எங்கள் கட்சி உறுப்பினர்களும் அவ்வாறு நடந்து கொள்வார்கள்” என கூறியதை அடுத்து, கண்ணியமான முறையில் செயல்படுமாறு பிரதி சபாநாயகர், எம்.பியை வலியுறுத்தினார்.