சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை !!
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி என்று கூறி அவரை சாடிய சரத் வீரசேகர எம்.பிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி. மேலும் பேசுகையில்,
“முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை சரத் வீரசேகர எம்.பி. இந்த பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளார். நீதிபதியின் மனைவி என்று அவர்களது தனிப்பட்ட விடயங்களை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதுடன் நீதிபதியை ஒரு மனநோயாளி என்று முறையற்ற வகையில் விமர்சித்துள்ளார்.
பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் 83 ஆவது பிரிவுக்கு அமைய நீதிபதிகளையும், நீதிமன்ற நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது. ஆனால் சரத் வீரசேகர தனது உரையின் போது நீதிபதியின் பெயரை சுட்டிக்காட்டி அவரை விமர்சித்துள்ளார் .இவை பாரதூரமானது. நிலையியற்கட்டளை 83 ஐ அப்பட்டமாக மீறும் செயல்.
சரத் வீரசேகர எம்.பி. இதற்கு முன்னரும் பாராளுமன்ற சிறப்புரிமை ஊடாக நீதிபதியை கடுமையாக விமர்சித்தார். இவரது கருத்துக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டதுடன், நீதிபதிகள், சட்டத்தரணிகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அவர் மீண்டும் இவ்வாறு நீதிபதியை விமர்சித்துள்ளார். ஆகவே இவ்விடயம் குறித்து சரத் வீரசேகர எம்.பி. மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.
அத்துடன் அவர் ஒரு முறை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் எனது பெயரைக்குறிப்பிட்டு நான் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார். அதனை நான் நிராகரிக்கின்றேன். நான் எந்தவொரு நீதிபதியின் பெயரையும் குறிப்பிடவில்லை” என்றார்.