இரத்தினக்கல்லால் 2 பில்லியன் வருமானம் பெறலாம் !!
இரத்தினக்கல் ஏற்றுமதி மூலம் 2025ஆம் ஆண்டாகும்போது வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விராஜ் டி சில்வா தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல் 07 மாதங்களில் மாத்திரம் இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 312 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.
வருடாந்தம் 02 பில்லியன் டொலர் இலக்கை அடைவதற்கு பிரதான தடையாக இருந்த சட்டவிரோத இரத்தினக்கல் ஏற்றுமதியை நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வேலைத்திட்டம் ஒன்று ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, வெளிநாட்டுக் கொள்வனவாளர்களுக்கு இந்நாட்டில் நடைபெறும் இரத்தினக்கல் ஏல விற்பனைகளில் நேரடியாக இரத்தினக்கற்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான வசதிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என டி.விராஜ் டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட “1O1” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.