சந்திரயான் 3: நாங்க ஏற்கனவே நிலா-ல தான் இருக்கிறோம் – பாகிஸ்தான் நபர் வெறித்தனம்!!
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திரயான்-3 எனும் பெயரில் ஒரு விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த ஜூலை மாதம் வானில் வெற்றிகரமாக செலுத்தியது.
நேற்று மாலை 06:04 மணியளவில் சந்திரயான்-3 திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தை வெற்றிகரமாக தொட்டது. அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலனை அனுப்பியிருந்தாலும், நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் இதுவரை தொட்டதில்லை.
எனவே விண்வெளி சரித்திரத்திலேயே மிகவும் அரிதான இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளை உலகமே பாராட்டி வருகிறது. உலகில் பலரும் இந்தியாவை பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் பலர் இந்தியாவை பாராட்டி வருகின்றனர். கடந்த ஓரிரு வருடங்களாக பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, பிற நாடுகளிடமும், பொருளாதார அமைப்புகளிடமும் உதவிகள் கேட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரயான்-3 நிலவை தொடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஃபாவத் சவுத்ரி இந்தியாவின் சாதனை முயற்சிக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியாவை போன்று பாகிஸ்தானும் நிலவிற்கு செல்ல முயற்சிகள் எடுக்குமா என அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஒரு பாகிஸ்தான் குடிமகன், “நாங்கள் நிலவிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நாங்கள் ஏற்கெனவே நிலவில்தான் வசிக்கிறோம். அதாவது நிலவில் குடிநீர், சாலை வசதி மற்றும் மின்சாரம் உட்பட எந்த வசதிகளும் கிடையாது. அதே போல்தான் பாகிஸ்தானிலும் இவை எதுவும் கிடையாது,” என பதிலளித்தார். இவரது நகைச்சுவையான பதில் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.