பொதுவெளியில் புதின் பாடி டபுள்? சர்ச்சையை கிளப்பிய புது வீடியோ!!!
திரைப்படங்கள் உருவாக்கப்படும் போது ஒருவரை போன்றே அச்சு அசலாக தோற்றமளிக்கும் பாடி டபுள் எனும் மற்றொரு நபரை பல்வேறு காரணங்களுக்காக சில காட்சிகளில் பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு தோற்றமளிக்கும் பாடி டபுள் நபர்களை, பொது வெளியில் தனக்கு பதிலாக நடமாட விடும் வழிமுறையை இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் ஜெர்மனியில், ஹிட்லர் பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தியதாக இன்றும் நம்பப்படுகிறது. ரஷிய அதிபர் புதின், எதிரிகளால் பொதுவெளியில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சி தன்னை போலவே தோற்றமளிக்கும் பாடி டபுள்களை பொதுவெளியில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
நடை, உடை, பாவனை, பேசும் விதம் உட்பட அனைத்து விஷயங்களிலும் அவர்களுக்கு புதினை போலவே நடந்து கொள்ள பயிற்சியளிக்கப்பட்டு இருப்பதாக அத்த தகவல்கள் கூறின. புதின் ஒருசில பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து, தனக்கு பதிலாக தனது பாடி டபுள் ஒருவரை பயன்படுத்துகிறார் என கடந்த ஜூன் மாதம், உக்ரைன் ராணுவ உளவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரி யூஸோவ் என்பவரும் உறுதிபட தெரிவித்திருந்தார்.
ரஷிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இச்செய்திகளை முற்றிலுமாக மறுத்தார். இந்நிலையில் ரஷிய நாட்டின் தேசிய திட்டங்களுக்கான மையத்தின் ஒரு சந்திப்பில் புதின் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நேரத்தை தெரிந்து கொள்வதற்காக புதின் எதேச்சையாக தனது இடக்கரத்தை பார்க்கிறார். அக்கரத்தில் கடிகாரம் இல்லாததால் உடனடியாக தனது வலக்கரத்தை பார்த்து நேரத்தை தெரிந்து கொள்கிறார். இதனையடுத்து, அந்நிகழ்ச்சியில் பங்கேற்றது புதின் அல்ல என்றும் அவரை போன்று தோற்றமளிக்கும் ஒரு பாடி டபுள் என்றும் இது சம்பந்தமாக இத்தனை காலம் வெளியான செய்திகள் உண்மை எனவும் இச்சம்பவம் குறித்து பலரும் விமர்சிக்கிறார்கள்.
இடது கர பழக்கம் உள்ள புதின் தனது வலக்கரத்தில் கைக்கடிகாரம் அணிவது வழக்கம். எனவே நேரத்தை தெரிந்து கொள்ள இடக்கர பழக்கம் உள்ளவர்கள் வலக்கரத்தைதான் பார்க்க வேண்டும் எனும் கருத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள். பல நாட்களோ, வாரங்களோ பொதுவெளியில் இருந்து அதிபர் புதின் காணாமல் போய், பிறகு திடீரென தோன்றுவதும் ரஷியாவில் சகஜமான ஒன்று என்பதால் இந்த விமர்சனங்களில் உண்மை இருக்கலாம் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறப்படுகிறது.