சந்திரயான்-3 திட்டம் வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளை 26-ந்தேதி பிரதமர் மோடி சந்திக்கிறார்!!
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண் கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து காணொலி முலம் பார்த்தார். லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர், காணொலி வாயிலாக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டும், வாழ்த்து தெரிவித்தும் பேசினார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில், பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு நாளை கிரீஸ் நாட்டுக்கு செல்கிறார். அன்றே அவர் இந்தியா திரும்புகிறார். நாடு திரும்பியவுடன் பிரதமர் மோடி, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு உழைத்த விஞ்ஞானிகளை சந்திக்கிறார்.
இந்தியா சரித்திர சாதனை படைக்க பணியாற்றிய விஞ்ஞானிகளை பாராட்டுகிறார். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த ஜி-20 வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை 3-வது பெரிய உலக பொருளாதாரமாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். கொள்கை ஸ்திரத்தன்மையை கொண்டு வந்து உள்ளோம். அன்னிய நேரடி முதலீட்டை தாராள மயமாக்கி உள்ளோம். போட்டித்திறன், மேம்பட்ட வெளிப்படைத் தன்மை, விரிவாக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல், புதுமைகளை ஊக்குவித்து உள்ளோம். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 60 முதல் 70 சதவீத வேலை வாய்ப்பை கொண்டுள்ளது. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்தை பங்களிக்கிறது. அவர்களுக்கு நமது தொடர்ச்சியான ஆதரவு தேவையாகும். வர்த்தகம் மற்றும் உலக மயமாக்கல் கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் உலக ளாவிய நம்பிக்கையை காண்கிறோம். கடந்த 9 ஆண்டுகளில் எங்களின் தொடர் முயற்சியின் பல னாக இந்தியா 5-வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.