சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோவை பாராட்டி சோனியா கடிதம்!!
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் பல வருடங்களாக ஈடுபட்டு வந்தது. சந்திரயான் எனும் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் கடந்த 2 முயற்சிகள் வெற்றிகரமாக அமையவில்லை.
இந்நிலையில், கடந்த ஜூலை அன்று சந்திரயான்-3 எனும் பெயரில் ஒரு விண்கலத்தை இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து வானில் வெற்றிகரமாக செலுத்தியது. சந்திரயான்-3 நேற்று மாலை 06:04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிலவை தொட்டது. உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவும் இதே முயற்சியை சில நாட்களுக்கு முன்பு செய்ய முயன்று தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ரஷியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலனை அனுப்பியிருந்தாலும், நிலவின் தென் துருவத்தை எந்த நாடும் இதுவரை தொட்டதில்லை. எனவே விண்வெளி சரித்திரத்திலேயே மிகவும் அரிதான இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளை உலகமே பாராட்டி வருகிறது. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இஸ்ரோவை புகழ்ந்து செய்தி வெளியிட்டுள்ளார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- இஸ்ரோவின் நேற்றைய மகத்தான வெற்றி குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
இந்த சாதனையானது அனைத்து இந்தியர்களையும், குறிப்பாக இளைய தலைமுறையினரை உற்சாகமடைய செய்யும் ஒரு பெருமைக்குரிய விஷயம். இஸ்ரோவின் நிகரற்ற திறமை பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்டது. ஒன்றுபட்டு முயற்சிக்கும் மதிப்பு வாய்ந்த பல தலைவர்கள் எப்போதுமே இஸ்ரோவில் இருந்து வருகின்றனர். சுயசார்பை மட்டுமே நம்பி 60-களின் தொடக்கத்திலிருந்தே இஸ்ரோ பல வெற்றிகளை குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உற்சாகமான தருணத்தில் இஸ்ரோவை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன். இவ்வாறு சோனியா தனது கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.