ஆதியோகி சிலைக்கான உரிய ஆவணங்கள் எங்கேயும், எப்போதும் சமர்ப்பிக்க தயார்- ஈஷா பதிலடி!!
கோவையில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னிலையில் வந்தது. அப்போது, ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை மற்றும் அருகில் உள்ள கட்டடங்களுக்கு அனுமதி பெறவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், ஈஷா யோகா மையம் “ஆதியோகி சிலைக்கான உரிய ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாக” பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது. அதை எங்கேயும் எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம். மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் அதை சமர்பிப்போம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.