கடன் மீள்செலுத்தும் தொகை பாதியாகும்!!
வருடாந்த கடன் மீள் செலுத்தும் தொகையை சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து
3 பில்லியனாக குறைக்கும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை முயற்சியில் இடம்பெறுவதாக
இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
புதன்கிழமை (24) கூடிய இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தீர்மானங்களை
அறிவிப்பதற்காக வியாழக்கிழமை (25) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
வருடாந்த வெளிநாட்டு கடன் சேவை கட்டணத்தை சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக
அதாவது பாதியாக குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சூட்சுமமாக அவர்
குறிப்பிட்டார்.
கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டு, பணவியல் கொள்கை பணப்புழக்கம்
அதிகரிக்கப்படுவதால், சந்தை வட்டி விகிதங்களும் குறையும் என்று தாங்கள் நம்புவதாக
குறிப்பிட்ட அவர், ஆனால் நினைத்தது போல் குறைக்கவில்லை என்றால், ஏதாவது ஒழுங்குமுறை
நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் அப்போது அறிவித்தாகவும் குறிப்பிட்டார்.
வட்டி விகிதங்கள் ஏதோவொரு வகையில் குறைந்துள்ளதாக நாணயச் சபையில்
கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டபோதும், குறைப்பு விகிதம் இன்னும் போதுமானதாக
இல்லை என்றார்.
கொள்கை வட்டி விகிதங்களுக்கு ஏற்ப, குறைப்பை விரைவுபடுத்தவும், ஏனைய வட்டி
விகிதங்களை சாதாரண வட்டி விகிதத்திற்கு இயல்பாக்கவும் எடுக்க வேண்டிய நிர்வாக
நடவடிக்கைகள் அடங்கிய சுற்றறிக்கை நாளை(இன்று) வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.