சந்திர மண்டலத்தை இந்தியா தொடும் போது, நாம் தொல்பொருளை தேடுகிறோம்!!
சந்திரனில் தடம் பதித்த நான்காம் நாடாகவும், நிலவின் தென்முனையில் விண்கலத்தை இறக்கிய முதலாவது நாடாகவும் இந்தியா சரித்திரம் படைத்துள்ளது.
இந்திய மக்களுக்கும், அரசுக்கும், குறிப்பாக இந்திய இஸ்ரோ நிறுவனத்தின் “மூன்-ப்ராஜெக்ட்” வேலைத்திட்ட பணிப்பாளர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞான தொழிட்நுட்ப அணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த சாதனையை எண்ணி, தென்னாசிய நாட்டவராகவும், இந்திய வம்சாவளி தமிழராகவும் பெருமையடைகிறேன்.
ஆனால், வானத்தில் ஏறி சந்திர மண்டல வாசலை இந்தியா தொடும் போது, நாம் தரைக்கு கீழே தொல்பொருளை தேடுகிறோம் என்ற உண்மையை உணர்ந்து வருந்துகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது,
இந்தியா தந்த 13A மாகாணசபையும் இன்று குருந்தூர் மலையில் ஏறி விழுந்து நிற்கிறது.
அது காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்று இழுபறி படுகிறது. சரித்திரத்தில் இருந்து பாடம் படிப்பதற்கு பதிலாக, எல்லா பிரச்சினைகளுக்கும் சரித்திரத்துக்குள் நுழைந்து பதில் தேடும் தோற்றுப்போன நாட்டவராக நாம் இன்று இருக்கிறோம்.
தொல்பொருள் அகழாய்வு பிரதேசம், மதங்களுக்கும், மத நிகழ்வுகளுக்கும் இடம் தராத பாதுகாக்கபட்ட பிரதேசமாக இருக்க வேண்டும்.
அது தொடர்பான எல்லா வரலாறு உண்மைகளையும் ஆவணப்படுத்தி ஆர்வலர்களுக்கு எடுத்து கூறும் அரச நிறுவனமாக இருக்க வேண்டும் என்ற முற்போக்கான சிந்தனையறிவு எமக்கு இல்லை.
ஆகவே, ஒருநாள், மாலைத்தீவும் இப்படி “மூன்-ரொக்கட்” அனுப்பும் வரை நாம் இப்படி தொல்பொருளாராட்சியில் தேடி மோதிக்கொண்டே இருப்போம். என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.