;
Athirady Tamil News

காவிரியில் தண்ணீர் திறப்பு: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!

0

தமிழகத்திற்கு போதுமான தண்ணீரை காவிரியில் இருந்து திறந்துவிட, கர்நாடக அரசு மறுத்த நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று பிஆர் கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, தினசரி 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் அமர்வு மறுத்துவிட்டது. மேலும், ”இந்த விஷயத்தில் எங்களுக்கு எந்த நிபுணத்துவமும் இல்லை. கூடுதல் சொலிட்டர் ஜெனரல், இதற்கான ஆணையம் வருகிற திங்கட்கிழமை கூடுகிறது.

அப்போது அடுத்த 15 நாட்களுக்கு திறந்துவிடக் கூடிய தண்ணீர் அளவு குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணயைம் தண்ணீர் திறந்து விடுவதற்கான வழிமுறைகள் பின்பற்றபட்டதா? இல்லையா? என்பது குறித்து அறிக்கை சமர்பிப்பது பொருத்தமானதாக இருக்கும் என கருதுகிறோம்” எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் கர்நாடாக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- நடப்பாண்டு வழக்கமான மழைப்பொழிவு இருந்ததாக தவறான அனுமானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 25 சதவீத அளவுக்கு மழைப்பொழிவு குறைந்திருப்பதாக தமிழ்நாடு அரசின் மனுவிலும், கர்நாடகத்திலுள்ள 4 அணைகளுக்கான நீர்வரத்து 42.5 சதவீதம் குறைந்திருப்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் பதிவு செய்துள்ளது.

கர்நாடகத்தின் அணைகளுக்கான நீர்வரத்து ஆகஸ்டு 8-ந்தேதி நிலவரப்படி 42.5 சதவீதம் குறைந்திருப்பதால், தமிழ்நாட்டுக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி காலம் ஜூன் 12-ந்தேதி முதல் செப்டம்பர் இறுதி வரை ஆகும். இதற்கு 37.27 டி.எம்.சி நீரே போதுமானது. காவிரி மேலாண்மை ஆணையத்தால் மதிப்பிடப்பட்ட இந்த கொள்ளளவை சுப்ரீம் கோர்ட்டு 2018-ம் ஆண்டு தீர்ப்பில் மாற்றம் செய்யவில்லை. மேட்டூர் அணையில் ஆகஸ்டு 23-ந்தேதி நிலவரப்படி 21.655 டி.எம்.சி. நீர் உள்ளது. நாள்தோறும் 10 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து வருகிறது. எனவே தமிழ்நாட்டில் போதுமான நீர் உள்ளதால், இந்த விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டியதில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 11-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மறுஆய்வு செய்யக்கோரி கர்நாடக அரசு ஆணையத்தில் மனு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்துக்கு தமிழ்நாடு அரசின் தேவையற்ற எதிர்ப்பே தற்போதைய பிரச்சினைக்கு காரணம். மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் 13 டி.எம்.சி அளவுக்கான கூடுதல் நீர் தமிழ்நாட்டில் ஜூன்-ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வறட்சியை தடுக்க உதவியிருக்கும். எனவே நீதியின் நலன் கருதி, தமிழ்நாடு அரசின் மனுவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.