சிறுத்தைகள் தாக்குதலை தடுக்க திருப்பதி மலைப்பாதையில் வேலி அமைக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு!!
திருப்பதி மலை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ஷெட்டி ஆந்திர ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோருடன் நடந்து சென்ற 3 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது. இதேபோல் லக்ஷிதா என்ற 6 வயது சிறுமியை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.
தற்போது மலை பாதை அருகே சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது. இதனால் பக்தர்கள் அச்சத்துடன் நடை பாதையில் நடந்து செல்கின்றனர். எனவே நடைபாதை முழுவதும் இரும்பு வேலி அமைக்க திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நடைபெறும் என தெரிவித்தனர்.