பிரசவத்தின்போது வயிற்றில் பஞ்சு வைத்து தைத்ததால் கர்ப்பிணி உயிரிழப்பு!!
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டை மண்டலம், தர்சங்க தண்டாவை சேர்ந்தவர் ரிக்யா. இவரது மனைவி ரோஜா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான ரோஜாவை கடந்த 15-ந்தேதி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர். ரோஜாவிற்கு சுகப்பிரசவம் ஆவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர் கிருஷ்ணா என்பவர் அறுவை சிகிச்சை செய்து ரோஜா வயிற்றிலிருந்து ஆண் குழந்தையை எடுத்தார். பின்னர் தையல் போடும்போது வயிற்றில் தெரியாமல் பஞ்சை வைத்து தைத்து விட்டார். 3 நாட்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த ரோஜா பின்னர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்தது முதல் ரோஜாவுக்கு கடும் வயிற்று வலி மற்றும் தையல் போட்ட இடத்தில் ரத்த கசிவு ஏற்பட்டது.
இதனை கண்டு பதறிபோன ரோஜாவின் குடும்பத்தினர் அவரை மீண்டும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரோஜாவின் வயிற்றை ஸ்கேன் செய்த பார்த்தபோது வயிற்றில் பஞ்சு இருந்தது தெரியவந்தது.அங்கிருந்த டாக்டர் கிருஷ்ணா ரோஜாவை சிகிச்சைக்காக அவரது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை அளித்தும் ரோஜாவுக்கு ரத்தக்கசிவு தொடர்ந்தது. இதையடுத்து ரோஜாவை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஜா பரிதாபமாக இறந்தார். ரோஜாவின் உறவினர்கள் அவரது பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் கர்ப்பிணி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.